கோடை விடுமுறை முடிந்து, இம்மாதம், 20ல் கல்லூரி விடுதிகள் மீண்டும்
திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில், செயல்படும் அரசு நல
விடுதிகளில், அரசு அறிவித்துள்ள சலுகைகளில், பெரும்பாலானவை, மாணவர்களுக்கு,
இதுவரை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இக்கல்வியாண்டிலாவது, திட்டங்களை முறைப்படி அமல்படுத்தினால், மாணவர்கள்,
கல்வித்தரம் மேம்பட வாய்ப்புண்டு.
தமிழகத்தில், ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 1,342 நல விடுதிகளும்,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ், 1,294 நல விடுதிகளும் உள்ளன.
இவற்றில், பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், தங்கி படித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள, அனைத்து நல விடுதிகளுக்கும் பல்வேறு வசதிகள் செய்து
கொடுப்பதாக, அரசு கூறுகிறது. ஆனால், எதார்த்தத்தில், அரசு அறிவித்த
சலுகைகளில், பாதியளவு கூட செய்து தரப்படுவதில்லை.
விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும்
விதமாக, ஒரு ஆங்கில நாளிதழும், இரண்டு தமிழ் நாளிதழும் வழங்க வேண்டும்.
விடுதிகளுக்கு, விளையாட்டு சாதனங்கள், நீர் சுத்திகரிப்புக் கருவி, புத்தக
அலமாரிகள், கிரைண்டர், நூலகப் புத்தகங்கள் மற்றும் பூச்சி அழிப்பான் மின்
கருவிகள், கலர் டிவி வழங்க வேண்டும்.
கல்லூரி விடுதிகளுக்கு, இன்வெட்டர், பார்வை குறிப்பு புத்தகங்கள்
மற்றும் கணினிகள் வழங்க வேண்டும். விடுதிகளில் தங்கி, நான்காம் வகுப்பு
முதல் எஸ்.எஸ்.எல்.சி., வரை பயிலும், மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு, இரண்டு
பாலிகாட்டன் சீருடைகள் வழங்க வேண்டும்.
ஆனால், தேர்வு நேரங்களில்
கூட மாணவர்கள், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மட்டுமே படித்து வருகின்றனர்.
பெரும்பாலான விடுதிகளில், இன்வெட்டர் வசதிகள் இருப்பதில்லை. குறிப்பாக,
கலர் டிவியைத் தவிர பிற வசதிகள் இல்லை.
பிளஸ் 2 வரை, அனைத்து பாடப்புத்தகங்களும் இலவசமாக வழங்க வேண்டும்.
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியருக்கு, சிறப்பு
வழிகாட்டிகள் வழங்க வேண்டும். பாய், போர்வை, எவர் சில்வர் தட்டு, டம்ளர்
போன்றவை இலவசமாக வழங்க வேண்டும்.
மலைவாழ் பகுதிகளில் உள்ள விடுதிகளில், கம்பளி ஆடை இலவசமாக வழங்க
வேண்டும். அனைவருக்கும், ஆங்கிலம்- தமிழ் சொல்லகராதி மற்றும் உலக வரைபடப்
புத்தகங்கள் இலவசமாக வழங்க வேண்டும். ஆனால், சிறப்பு வழிகாட்டிகள்
வழங்குவதோடு, மற்ற சலுகைகள் தரப்படுவதில்லை. மலைவாழ் பகுதிகளில் உள்ள
விடுதிகளில், பல ஆண்டுகளாக கிழிந்த போர்வையே இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்கும் பொருட்டு,
மூன்று கட்டடங்களாக மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்த வேண்டும். இவை
நடப்பதே அரிது. வாரத்துக்கு, ஐந்து நாட்கள் வேகவைத்த முட்டைகளும், முட்டை
சாப்பிடாதவர்களுக்கு, வாழைப்பழங்கள் வழங்க வேண்டும். இத்திட்டம் ஓரளவில்
செயல்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்தின், முதல் மற்றும், மூன்றாம் வாரத்தில் ஒரு நாள்
ஆட்டிறைச்சியும், இரண்டாம் வாரத்தில் ஒரு நாள், கோழி இறைச்சியும் வழங்க
வேண்டும். ஆனால், கோழி இறைச்சியே பெரும்பாலும் வழங்கப்படுகிறது.
இவ்வாறாக, மாணவர்களுக்கென கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் ஏட்டளவில்
மட்டுமே உள்ளது. அதை அமல்படுத்துவதில் நலத்துறைகள் அக்கறை காட்டுவதில்லை.
இது தொடர்ந்தால், தனிநபர்கள் மட்டுமே கொழிக்கும் துறையாக, நலத்துறைகள்
மாறும் அபாயம் உள்ளது.
No comments:
Post a Comment