பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, தற்போது எந்த படிப்பை தேர்ந்தெடுப்பது,
எந்தப் படிப்பை படித்தால் நல்லது, எந்த படிப்பு எளிதாக இருக்கும், எந்த
படிப்பை படித்தால் வேலை கிடைக்கும், அதிக சம்பளம் தரும் படிப்பு எது என
பல்வேறு கேள்விகள் மண்டையை குடையும்.
இதைத் தீர்க்க,
உங்களை நீங்களே ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் மூலம் நல்ல முடிவை பெறலாம்.
முதலில் உங்களிடம் உள்ள திறன்கள் என்ன என்பதை பட்டியலிடுங்கள். உதாரணமாக,
உங்களுக்கு ஒரு துறையில் ஆர்வம் இருக்கிறது என்றால், அந்த ஆர்வம் திடீரென
வந்ததா அல்லது இயற்கையாகவே, ஆரம்பத்திலிருந்தே வந்ததா என்பதை பார்க்கவும்.
ஆரம்பத்திலிருந்தே கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் மீது
ஆர்வம் இருந்தால், அது தொடர்பான துறைகளை தேர்ந்தெடுக்கலாம். பணம் மற்றும்
நிதி சம்பந்தப்பட்ட துறையின் மீது ஆர்வம் கொண்டிருந்தால் அத்துறை சார்ந்த
படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.
உங்களது திறமை பற்றி உங்களது ஆசிரியர்கள், நண்பர்கள்,
பெற்றோர்களும் அறிந்து வைத்திருப்பர். உங்கள் திறமை மொழிபாடங்களில் உள்ளதா,
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் உள்ளதா, உங்களது திறன் என்ன,
நுண்ணறிவு அளவு என்ன, என்பதை ஆசிரியர்கள் அறிந்து வைத்திருப்பர்.
எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு பற்றி, அவர்களிடம்
ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. உளவியாலளர்களிடம் நேரில் கேட்டும்
தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு படிப்பும் நல்ல படிப்புதான். ஒவ்வொரு துறையிலும்
நிறைய வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் தேர்ந்தெடுத்த துறையில்,
நாம் வளர்த்துக்கொள்ளும் திறமையை பொருத்தே, வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
சிலர் இந்த படிப்பு வேஸ்ட், இந்த படிப்பில் வேலையே இல்லை, அதிக சம்பளம்
இல்லை. இந்த படிப்பை எடுக்காதீங்க எனக் கூறுவர். அவர்களது பேச்சை நம்பி,
நீங்கள் படிக்க ஆர்வமாக இருக்கும் படிப்பை மாற்றிவிடாதீர்கள்.
ஏனென்றால் மற்றவர்களுக்கு அந்த படிப்பில் போதிய திறமை
இல்லை, அதனால் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதை நினைவில்
கொள்ளுங்கள். அந்த மாதிரியான நபர்களிடம் நீங்கள் ஆலோசனை கேட்கமால் விலகி
இருப்பதே நல்லது. உங்களது நம்பிக்கைக்கு உரியவர்கள், உங்களது வாழ்வில்
உண்மையான அக்கறை கொண்டிருப்பவர்களிடம் மட்டும் ஆலோசனைகளை கேட்கவும்.
நீங்கள் விருப்பமுடன் தேர்ந்தெடுத்த படிப்பை படிக்கும்போது,
ஈடுபாடு, அர்பணிப்பு உணர்வு, புரிந்து கொள்ளுதல், சாதிக்க முடியும் என்ற
தன்னம்பிக்கையுடன் மனதை ஒரு நிலைப்படுத்தி படித்தால் வேலை வாய்ப்புகளை
பெறலாம்.
No comments:
Post a Comment