கோவையில் படித்தவர்களை குறிவைத்து, பணம் சம்பாதிக்கும் நோக்கில், போலி
தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள், புற்றீசல் போல் பெருகி வருகின்றன.
போலீசார் கண்காணித்து, இவற்றுக்கு கடிவாளம் போடாவிட்டால், அப்பாவி மக்கள்
பலரும் ஏமாற்றப்படுவர்.
கோவை மற்றும் சுற்றுவட்டார
பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு மோசடி நிறுவனங்கள், உருவாகி
வருகின்றன. ஈமு கோழி பண்ணையில் துவங்கி, ஏலச்சீட்டு, நிதி நிறுவனம்,
நாட்டுக்கோழி, நகைக்கடை சீட்டு என, மோசடி பேர்வழிகளின் எண்ணிக்கை
அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்த ஏமாற்றுக்காரர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்தாலும், மறுபுறம்
பொதுமக்களும் விழிப்புணர்வு பெற்றவர்களாக இல்லை. பொருளாதார ரீதியாக,
மோசடியில் ஈடுபடுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இல்லாததும்,
ஏமாற்றுக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகிறது.
தற்போது, "வேலைவாய்ப்பு நிறுவனம்" என்ற பெயரில் படித்தவர்களை குறிவைத்து
சிலர், அலுவலகங்களை திறந்து, செயல்படுகின்றனர். சென்னைக்கு அடுத்து,
கல்வியில் முன்னோடியாக உள்ள கோவையை மையமாக கொண்டு, பல தனியார் வேலைவாய்ப்பு
நிறுவனங்கள் முளைத்து வருகின்றன.
பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை பெற்றவர்கள் வரை,
இந்நிறுவனங்களின் வலையில் விழுகின்றனர். இந்த நிறுவனங்கள் முதலில் தங்கள்
பெயரை மொபைல்போன் எண்களுடன் விளம்பரப்படுத்துகின்றன. அதைப் பார்த்து,
நிறுவனத்தை அணுகுவோரிடம், "பயோ டேட்டா" பெற்றுக் கொள்கின்றனர்.
தொடர்ந்து, 50 ரூபாய் கட்டணம் பெற்றுக் கொண்டு, ஒரு விண்ணப்ப படிவத்தை
பூர்த்தி செய்ய சொல்கின்றனர். இந்த விண்ணப்பத்தில் நிறுவனத்தின் பெயர்,
முகவரி, எதுவும் இருக்காது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பெற்று
கொள்ளும் நிறுவனத்தினர்,
குறிப்பிட்ட இடைவெளியில், ஏதாவது ஒரு இடத்தில், வேலை வாங்கி
தருகின்றனர். வேலைக்கு சேர நபர் ஒருவருக்கு 1,000 ரூபாய் முதல் 10 ஆயிரம்
ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. வேலைக்கு செல்வோர், தங்களுக்கு
விருப்பமில்லாத வேலையை தான் பார்க்க வேண்டியுள்ளது.
பின், ஒரு சில நாட்களில் அந்த வேலையை விட்டு விடுகின்றனர்; பணத்தை
திருப்பி கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும், பணத்தை திருப்பி தராமல்
தட்டிக் கழிக்கின்றனர். இதனால், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு
கொள்ளை லாபம் கிடைக்கிறது.
தற்போது துளிர்விட்டுள்ள இந்த மோசடியை முளையிலேயே கண்காணிக்காவிட்டால்,
வரும் காலங்களில், பல்வேறு மோசடி புகார்கள் குவியும் என்பதில்
சந்தேகமில்லை. பாரதியார் பல்கலை வேலைவாய்ப்பு வழிகாட்டித் துறை தலைவர்
ஜெயக்குமார் கூறியதாவது:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருந்தால், அவர்களே
படிப்பு தகுதிக்கேற்ப தனியார் நிறுவனங்களில் வேலை பெற்று தர பரிந்துரை
செய்கின்றனர். இதற்கென்று தனியாக கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.
தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் என்ற பெயரில், அரசு உரிமம் இல்லாமல் பலர்
அலுவலகங்களை திறந்து செயல்படுகின்றனர். இதுபோன்ற நிறுவனங்களை, ஒருபோதும்
அணுகக் கூடாது. இவர்கள் இணையதளத்திலும் தனியாக இணையதளம் ஆரம்பித்து, அதன்
மூலம் பணத்தை வசூலித்து வருகின்றனர்.
இவர்களை நம்பி பணத்தை கட்டினால், வேலையும், பணமும் கிடைக்காது. மத்திய,
மாநில அரசுகளின் கண்காணிப்பு இல்லாததால், இதுபோன்ற அலுவலகங்கள் எந்த
சிரமமும் இன்றி துவக்கப்படுகின்றன. இவ்வாறு பேராசிரியர் ஜெயக்குமார்
கூறினார்.
No comments:
Post a Comment