சேலம் மாவட்டத்தில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ்
செயல்பட்டு வந்த மாதிரிப்பள்ளிகள், 10ம் வகுப்பு தேர்வில், 100 சதவீத
தேர்ச்சி பெற்றதால், புதிதாக துவக்கப்பட்ட, ஒன்பது மாதிரிப்பள்ளிகளில் சேர,
மாணவ, மாணவியரிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், ஒன்பது மற்றும்,
10ம் வகுப்பு கல்வியை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி
திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், கல்வியில் பின்தங்கிய
ஒன்றியங்களில், ஏழை, எளிய மாணவர்களுக்காக, இலவச ஆங்கில வழிக்கல்வி வழங்க,
மாதிரிப்பள்ளி துவக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில், முதல் கட்டமாக இடைப்பாடி, காடையாம்பட்டி,
கொங்கணாபுரம் ஆகிய ஒன்றியங்களில், அரசு பள்ளி கட்டடத்தில் தற்காலிகமாக
துவங்கியது. இப்பள்ளிகளுக்கான கட்டடம், 3 கோடி ரூபாய் செலவில் கட்டி
முடிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளிவந்த, 10ம் வகுப்பு தேர்வு முடிவு,
மாதிரிப்பள்ளிகளுக்கு, பொதுமக்களிடையே நற்பெயரை பெற்றுத்தந்துள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், மூன்று பள்ளிகளும், 100 சதவீதம்
தேர்ச்சி பெற்றன. ஆங்கில வழிக்கல்வியை இலவசமாக தரும் அதே வேளையில், அங்கு
தரத்துடன் கற்பித்தல் இருப்பதால், மாதிரி பள்ளிகளில் சேர மக்களிடையே, அதிக
ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டில், இரண்டாம் கட்டமாக நங்கவள்ளி, சங்ககிரி, வீரபாண்டி,
பெத்தநாயக்கன்பாளையம், தாரமங்கலம், கொளத்தூர், மகுடஞ்சாவடி,
பனமரத்துப்பட்டி, ஏற்காடு ஆகிய ஒன்றியங்களில், ஒன்பது புதிய
மாதிரிப்பள்ளிகள் துவக்கப்பட்டன.
மாதிரிப்பள்ளிகள் துவக்கப்பட்டு, இன்னும் முழுமையாக, ஆசிரியர்
பணியிடங்கள் கூட நிரப்பாத நிலையிலும், அவற்றில் சேர மாணவ, மாணவியர் மற்றும்
பெற்றோரிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது.
இதுகுறித்து, ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: மாதிரிப்பள்ளிகளை பொறுத்தவரை,
நூலகம், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட, கட்டமைப்பு
வசதி ஏற்படுத்தப்படுகிறது. மேலும் இலவசமாகவும், அரசின் அனைத்து
சலுகைகளுடனும், ஆங்கில வழிக்கல்வி கற்றுத்தரப்படுகிறது.
மெட்ரிக் பள்ளிகளில், ஆயிரக்கணக்கில் பணத்தை கட்ட முடியாமல் தவிக்கும்
பெற்றோருக்கு, மாதிரிப்பள்ளிகள் பயனுள்ளதாக உள்ளது. இதனால், அதிக போட்டி
காணப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment