"ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது, ஒரு
சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது" என்பார்கள். ஆனால், இங்கே ஒரு நூலகத்தை
மூடி, குற்றவாளிகளை விசாரிக்கும் நீதிமன்றமாக மாற்றியதால், பல ஆயிரம்
வாசகர்கள் தவிக்கின்றனர்.
கோவையில் 1952ல் வ.உ.சி., பூங்கா அருகே, மாவட்ட மைய நூலகம்
துவங்கப்பட்டது; 1987ல் ஆர்.எஸ்.புரம் கவுலி பிரவுன் ரோட்டில், சொந்த
கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. பழைய நூலகம் இருந்த அதே கட்டடத்தில்,
காந்திபுரம் கிளை நூலகம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. மைய நூலகம்
மாற்றப்பட்டதால் அதில் உறுப்பினர்களாக இருந்த நூற்றுக்கணக்கானோர், இக்கிளை
நூலக்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். நகரத்தின் மையப்பகுதியில்
இந்நூலகம் இருந்ததால், மற்ற கிளை நூலகங்களை விட, இங்கு வரும் வாசகர்களின்
எண்ணிக்கை பெருமளவில் இருந்தது.
வ.உ.சி., பூங்காவுக்கு வரும் பொதுமக்கள், நேரு விளையாட்டு
அரங்கத்தில் பயிற்சி பெற வரும் விளையாட்டு வீரர்கள், பள்ளி, கல்லூரி
மற்றும் பல்கலை மாணவர்கள் என, பலர் இந்நூலகத்தை பயன்படுத்தினர். பல
பேருக்கு அறிவின் கலங்கரை விளக்கமாக விளங்கிய இந்நூலகம் 1998ல் திடீரென
காலி செய்யப்பட்டு, கோவை குண்டு வெடிப்பு கைதிகளை விசாரிக்கும், தனி
நீதிமன்றமாக மாற்றப்பட்டது.
இங்கு செயல்பட்ட நூலகம், உப்பிலிபாளையம் ஆடிஸ் வீதியில்,
ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டுக்கு மாற்றப்பட்டது. அங்கு நாற்காலிகள், மின்
விளக்கு வசதிகள் இல்லாததால் வாசகர்கள் அவதிப்பட்டனர். கடந்த சில நாட்களாக,
அந்த நூலகத்தையும் காணவில்லை. அப்பகுதியில் வசிப்போரிடம் கேட்டால்,
"தெரியவில்லை" என்கின்றனர். இந்த ஒரு நூலகம் மட்டுமின்றி, கோவை
மாநகராட்சியில் உள்ள எல்லா நூலகங்களுக்கும் இதே "மரியாதை" தான்.
கோவை மாவட்ட நூலக ஆணைக்குழுவின்கீழ் 235 கிளை நூலகங்கள்
செயல்பட்டு வருகின்றன. இதில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்
மட்டும் 42 நூலகங்கள் உள்ளன. ஐந்தாயிரம் மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு
கிளை நூலகம் திறக்கப்பட வேண்டும் என்கிறது நூலக விதி. காந்திபுரம்,
ராம்நகர், காட்டூர், சித்தாபுதூர், அனுப்பர்பாளையம், ரயில்வே ஸ்டேஷன்
மற்றும் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்சம் இரண்டு
லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆனால், இப்பகுதியில் ஒரு கிளை
நூலகம் கூட இல்லை.
குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை முடிந்த நிலையில், அந்த
கட்டடத்துக்கு நூலகத்தை மாற்றியிருக்க வேண்டும். ஆனால், அந்த கட்டடம்,
மாவட்ட நூலகத்துறையிடம் ஒப்படைக்கப்படவே இல்லை. தற்போது, வேறு
நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
இளைய தலைமுறையினரிடம் வாசிப்பு அனுபவத்தை விதைத்து, அவர்களை
நல் வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு, அரசுக்கு உள்ளது. அந்த வகையில்,
நகருக்குள் பல இடங்களிலும் புதிய நூலகங்களை அமைக்க வேண்டியது அரசின் கடமை.
அதைச் செய்யாவிட்டாலும், பரவாயில்லை; இருக்கும் நூலகங்களையாவது பாதுகாக்க
வேண்டும்.
"மீண்டும் செயல்படும்"
மாவட்ட நூலக அலுவலர் கார்த்திகேயன் கூறுகையில்,
"காந்திபுரம் கிளை நூலகம், இப்போது ரத்தினபுரி முத்துக்குமார் நகரில்
மாநகராட்சிக்கு சொந்தமான சிறிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
குண்டுவெடிப்பு வழக்குகள் முடிந்து விட்டதால், அக்கட்டடத்தை
நூலகத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என, தலைமை செயலர் மற்றும் வருவாய்
நிர்வாக ஆணையருக்கு கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார். விரைவில் கட்டடம்
கிடைத்து விடும். அதன் பின், நவீன முறையில் காந்திபுரம் கிளை நூலகம் பழைய
இடத்தில் நிரந்தரமாக செயல்படும்," என்றார்.
No comments:
Post a Comment