மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, பல்வேறு மாவட்டங்களில் உள்ள, 10க்கும்
மேற்பட்ட சிறப்பு பள்ளிகளை மூடுவதற்கான, ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக,
பல்வேறு மாற்றுத் திறனாளிகள் நல அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
மாற்றுத் திறனாளி நலத்துறை மூலம்
தமிழகம் முழுவதும் பல்வேறு பிரிவுகளில், சிறப்பு வகுப்புகள் நடந்து
வருகின்றன. குறிப்பாக, 20 பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர்
குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 10க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளை மூடுவதற்கான, ஆயத்த
பணிகளில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
குறிப்பாக, சென்னை, பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் மேல்நிலை
பள்ளியில், நடந்த கலந்தாய்வில், பார்வையற்ற மாணவர்களின் பார்வைத் திறனை
பரிசோதிக்கவும், அதன் அடிப்படையில் முழுமையாக பார்வையற்றவர்களைத் தவிர, மிக
மிகக் குறைவாக பார்வை தெரிந்தால் கூட சேர்க்கை மறுக்க, பல்வேறு முயற்சிகள்
நடந்து வருவதாகவும், குற்றம்சாட்டி வருகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமை
பாதுகாப்போர் நலச் சங்க செயலர், நம்புராஜன் கூறியதாவது: சென்னை,
பூந்தமல்லியில், பார்வையற்றோருக்கு, புக் பைண்டிங், டிரில்லிங், பைலிங்
போன்ற பயிற்சிகளும், காதுகேளாதோருக்கு, பிட்டர், டர்னர், வெல்டிங்
உள்ளிட்ட, ஐ.டி.ஐ., பயிற்சிகளும், உடல் ஊனமுற்றோருக்கு பல விதமான பணிகளை
அளிக்க, மாற்றுத் திறனாளி நலத்துறை, பார்வையற்றோர் தொழிற்பயிற்சி மையத்தை
நடத்தி வருகிறது.
இதில், புக் பைண்டிங் பயிற்சியைத் தவிர மற்ற பயிற்சிகளை ஏற்கனவே,
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை நிறுத்தி விட்டது. இந்த ஆண்டு இதற்கான
பயிற்சியையும் நிறுத்தி, திட்டத்தையே முடக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள, மொத்த மாற்றுத் திறனாளி குழந்தைகளின் விகிதாசார
அடிப்படையில் பார்த்தால், தற்போது இயக்கப்படும் சிறப்புப் பள்ளிகளின்
எண்ணிக்கை மிகக் குறைவானதாகும்.
குறிப்பாக, கிராமப்புற, எளிய, அறியாமையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க, மாற்றுத் திறனாளி நலத்துறை
எந்த உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், இருக்கும் ஒரு சில பள்ளிகளையும் மூட முயற்சிக்கும்
பட்சத்தில், அது மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராகவே அமையும். எனவே,
இப்பிரச்னையில் முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment