ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் கல்விக்கு கொடுக்கும்
முக்கியத்துவம், விளையாட்டிற்கு கொடுக்கப்படுவதில்லை. 80 சதவீத பள்ளிகளில்
விளையாட்டு மைதானம் புதர்மண்டியும், போதிய விளையாட்டு உபகரணங்கள் இன்றியும்
உள்ளது. மாணவர்களிடம் விளையாட்டு திறனை வளர்ப்பது
கேள்விக்குறியாகிவிட்டது.
மாவட்டத்தில் 66 அரசு உயர்நிலை பள்ளிகள், 61 அரசு
மேல்நிலைபள்ளிகள் உள்ளன. பொதுவாக பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு
தேர்வுகளில் நூறு சதவீத தேர்ச்சி, மாவட்ட அளவில் சாதனை போன்றவைகளில்தான்
கல்வி துறை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், விளையாட்டு
திறமை கொண்ட மாணவர்களை, ஊக்குவிப்பது இல்லை.
பள்ளிகளில் மைதானத்தை மேம்படுத்துதல் கால்பந்து, வாலிபால்,
பேட்மிட்டன் நெட், ஹாக்கி போன்ற உபகரணங்கள் இல்லை. மாணவர்கள் விளையாட்டு
திறனை மேம்படுத்த முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். இதனால், மாநில அளவில்
சாதிக்க உள்ளவர்களின், திறமை வீணடிக்கப்படுகிறது.
மாநில அளவில் தற்போது, விளையாட்டிற்கு முக்கியத்துவம்
கொடுத்து, உடற்கல்வியை கட்டாயமாக்கியுள்ளனர். இதன்படி 9ம் வகுப்பு வரை,
உடற்கல்வி திட்டம் தயாரிக்கப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக
மாவட்டம்தோறும் விளையாட்டு ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சியும்
அளிக்கப்பட உள்ளது. ஆனால், பயிற்சியும், புத்தகமும் வழங்கினால் போதுமா,
மைதானம் மற்றும் உபகரணம் இல்லாமல் எப்படி மாணவர்களை தயார் செய்வது என்ற
கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
ஒவ்வொரு பள்ளிக்கும் விளையாட்டிற்கான நிதி சரிவர
வழங்கப்படாததால், வட்டார, மாவட்ட, மண்டல, மாநில விளையாட்டு போட்டிகளில்
பங்கேற்ககூட அழைத்து செல்ல முடியாமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர். முன்பு
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கிராமம் தோறும் விளையாட்டு உபகரணங்கள்
வழங்கப்பட்டு, மைதானங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது அவையும்,
பராமரிக்கப்படாமல் பயன்பாடின்றி உள்ளது. இதனால் மாவட்டத்தில் விளையாட்டு
என்பது மாணவர்களிடையே கேள்விக்குறியாகிவிட்டது.
இதுகுறித்து உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர் சங்க மாநில
அமைப்பாளர் ரமேஷ் கூறியதாவது: "இலவச புத்தகம், செருப்பு, சீருடை வழங்குவது
போல், அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்களையும் இலவசமாக வழங்க
வேண்டும். பள்ளிதோறும் செஸ் கிளப் துவங்கியுள்ளதுபோல் காலபந்து, வாலிபால்,
ஹாக்கி உட்பட அனைத்து விளையாட்டுகளுக்கும், கிளப் துவங்கி மாணவர்களை
ஊக்குவிக்க வேண்டும். தடகளம் உட்பட பல விளையாட்டுகளை மேம்படுத்த நடவடிக்கை
எடுக்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment