மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல்,
நேற்று வெளியிடப்பட்டது. இதில், ஏழு பேர், 200க்கு, 200 மதிப்பெண் எடுத்து
சாதித்துள்ளனர். இவர்களில், நான்கு பேர் மாணவர்கள். மாணவர் சேர்க்கை பொது
கலந்தாய்வு வரும், 19ம் தேதி துவங்குகிறது.
நடப்பு, 2013 -14ம்
கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர,
29,569 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவற்றில், ஒரே விண்ணப்பதாரர்கள்
பெயரில், பெறப்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட, 168 விண்ணப்பங்கள், பல்வேறு
காரணங்களால் நிராகரிக்கப்பட்ட, 616 விண்ணப்பங்கள் ஆகியவை நீங்கலாக, 28,785
விண்ணப்பங்கள் கலந்தாய்விற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றில், 10,182 பேர் ஆண்கள்; 18,603 பேர் பெண்கள். அதிகபட்சமாக,
பி.சி., பிரிவினரிடம் இருந்து 12,131 விண்ணப்பங்களும், மாநில அரசு கல்வி
திட்டத்தில் படித்த மாணவர்களிடம் இருந்து, 26,348 விண்ணப்பங்களும்
பெறப்பட்டுள்ளன.
இவர்களுக்கான, மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலை, சுகாதார துறை
அமைச்சர் வீரமணி, மருத்துவக் கல்வி இயக்ககத்தில், நேற்று வெளியிட்டார்.
தரவரிசை பட்டியலில், அபினேஷ் -திண்டுக்கல்; பரணிதரன் - திருக்கோவிலூர்;
பழனிராஜ் - திருச்செங்கோடு; தினேஷ் - தர்மபுரி; ரவீனா - கிருஷ்ணகிரி;
நந்தினி - திருப்பத்தூர்; ஜெயஓவியா - காட்பாடி ஆகியோர், 200க்கு, 200,
"கட்-ஆப்&' மதிப்பெண்களும், முத்து மணிகண்டன்- ஆவடி; சென்னை, விக்னேஷ் -
தாராபுரம்; ஹேம்நாத் - கிருஷ்ணகிரி ஆகியோர், 200க்கு, 199.75
மதிப்பெண்களும் பெற்று, தரவரிசை பட்டியலில் முதல், 10 இடங்களை
பிடித்துள்ளனர்.
இவர்களில், ஏழு பேர், பி.சி., பிரிவை சேர்ந்தவர்கள்; ஆறு பேர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், பிளஸ் 2
படித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தரவரிசை பட்டியல் வெளியீட்டிற்கு பின், அமைச்சர் வீரமணி கூறியதாவது:
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, பொது கலந்தாய்வு, வரும்,
19ம் தேதி துவங்குகிறது. மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள்
உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு, 18ம் தேதி, கலந்தாய்வு நடைபெறும்.
இதற்கான கால அட்டவணை, ஓரிரு நாளில் வெளியிடப்படும். முதல்கட்டமாக,
தற்போது, தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில், அகில இந்திய
ஒதுக்கீடு போக, மீதமுள்ள, 1823 எம்.பி.பி.எஸ்., இடங்கள், அரசு பல்
மருத்துவக் கல்லூரியின், 85 பி.டி.எஸ்., இடங்கள், தமிழ்நாடு டாக்டர்
எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் கீழ் உள்ள, தனியார் மருத்துவக்
கல்லூரிகள் மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டு
இடங்கள் ஆகியவற்றுக்கு, கலந்தாய்வு நடைபெறும்.
இந்த ஆண்டு, புதிதாக துவங்கப்பட்டுள்ள, திருவண்ணாமலை அரசு மருத்துவக்
கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள், சென்னை மருத்துவக் கல்லூரி,
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில், முறையே அதிகரிக்கப்பட்டுள்ள, 85
மற்றும் 100 இடங்கள் என, மொத்தம், 285 கூடுதல், எம்.பி.பி.எஸ்.,
இடங்களுக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும், இதுகுறித்து, மத்திய அரசிடம் இருந்து முறையான ஒப்புதல்
வந்ததும், இந்த இடங்களுக்கு தனியாக கலந்தாய்வு நடத்தப்படும். டி.டி.,
மருத்துவக் கல்லூரி விவகாரம் குறித்து, எம்.சி.ஐ.,யிடம் தெரிவித்துள்ளோம்.
அதன் வழிக்காட்டுதலின்படி, இப்பிரச்னையில், தமிழக அரசு முடிவெடுக்கும்.
இவ்வாறு வீரமணி கூறினார்.
தற்போதைய நிலவரப்படி, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில், மாநில
ஒதுக்கீடாக உள்ள, 1,823 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 11 தனியார் மருத்துவக்
கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 இடங்கள், அரசு பல் மருத்துவக்
கல்லூரியின், 85 பி.டி.எஸ்., இடங்கள் மற்றும் 18 தனியார் பல் மருத்துவக்
கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடான, 909 பி.டி.எஸ்., இடங்கள் என, மொத்தம்,
2,655 இடங்கள், முதல்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.
No comments:
Post a Comment