படிப்பை தொடர முடியாத மாணவர்களின் சான்றிதழ் மற்றும் கட்டணத் தொகையை
சில கல்லூரிகள் திருப்பித்தர மறுப்பதாக புகார் எழுந்துள்ளது; அதேசமயம்,
புகாரின் அடிப்படையில் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என
கல்வித்துறை எச்சரித்துள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி,
கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கிய
மேற்கு மண்டலத்தில், 17 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 24 அரசு உதவிபெறும்
கல்லூரிகள், 322 சுயநிதி கல்லூரிகள் உள்ளன.
இதில், அரசு கல்லூரிகளில் கவுன்சிலிங் முறை பின்பற்றப்படுவதால் முறையான
சேர்க்கை இடம்பெறுகிறது. "ஆனால், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் இன்ஜி.,
கலை அறிவியல் கல்லூரிகளை பொறுத்தவரை, தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு
முன்னரே கிராக்கியான பாடங்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தி
சேருகின்றனர்.
இம்மாணவர்களில் சிலர் படிப்பை தொடராது வெளிவரும் நிலை ஏற்படுகிறது. சில
கல்லூரிகள் "டாக்குமென்ட் சார்ஜ்" உட்பட பல்வேறு காரணங்கள் கூறி, பணத்தை
பிடித்தம் செய்து மீதியை வழங்குகின்றனர்.
சில கல்லூரிகள் சான்றிதழ்களையும், முன்தொகையையும் தரமறுப்பதாகவும்,
இதனால் வேறு கல்லூரிகளில் சேரமுடியவில்லை என மாணவர்கள் புகார்
தெரிவித்துள்ளனர். கல்லூரி கல்வி இணை இயக்குனர் (பொறுப்பு) சேகரிடம் கேட்ட
போது, "கல்லூரிகள் சான்றிதழ் மற்றும் பணத்தை திரும்ப தரமறுப்பதாக ஏதேனும்
புகார்கள் வந்தால், புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்"
என்றார்.
அண்ணா பல்கலை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை அண்ணா பல்கலையில்
மாணவர்களின் குறைதீர்க்க "ஸ்டூடன்ட்ஸ் அப்பேர்" எனும் தனிப்பிரிவு இயங்கி
வருகிறது. இன்ஜினியரிங் கல்லூரிகளில் சான்றிதழ்கள், கட்டணத் தொகையை
தரமறுத்தல் உள்ளிட்ட புகார்களையும் ஸ்டூடன்ட்ஸ் அப்பேர் இயக்குனரிடம்
தெரிவிக்கலாம்.
மேலும், பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள அண்ணா பல்கலை மண்டல மையத்தில்
இயங்கும் "ஸ்டூடன்ட்ஸ் அப்பேர்" துணை இயக்குனர் அல்லது மைய இயக்குனரிடம்
புகார் அளிக்கலாம். புகாரின் தன்மைக்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment