ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் "பெற்றோரின் நோக்கும்,
பிள்ளைகளின் போக்கும்" என்ற தலைப்பில் ஆஸ்திரேலிய தமிழ் ஆய்வு மையம்
ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஆஸ்திரேலிய தமிழ்க்
கலாசாலையின் கேரம்டவுன்ஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
செந்தில்குமார், இந்தியத் தமிழ்ச் சங்க முன்னாள் செயலாளர்
சாதிக்பாட்சா, பொன்னரசு, சாந்தி சிவக்குமார் ஆகியோர் குழுத் தீர்வாளர்களாக
கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதய அறுவை சிகிச்சை நிபுணர் அருணோதயராஜின்
மனைவியான சமூக சேவகி சாந்தினி அருணோதயராஜ் சிறப்பு விருந்தினராக
கலந்துகொண்டார். ஆஸ்திரேலிய தமிழ் ஆய்வு மையத்தின் நிறுவனர் சுகுமாரன்
தலைமையேற்க, பள்ளியின் இயக்குனர் புவனேஸ்வரி சுகுமாரன் விழாவை
ஒருங்கிணைத்து நடத்தினார்.
அயல்நாட்டில் மாறுபட்டக் கலாச்சாரப்பின்னணியில் வாழும்
குழந்தைகளின் தமிழ் மற்றும் பண்பாடு குறித்து பெரும் கவலையில் மூழ்கியுள்ள
பெற்றோர்களுக்கு உண்மை நிலவரத்தை விளக்கும் முகமாக ‘பெற்றோரின் நோக்கும்
பிள்ளைகளின் போக்கும்’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.
நம்முடைய பிரச்சனைக்கும், குழப்பத்திற்கும் சரியானத் தீர்வு
நம்மிடம் தான் இருக்கிறது. சமுதாயம் என்பது முதலில் தன்னில் இருந்துதான்
ஆரம்பிக்கிறது. தன்னுடைய எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப, தான் வாழும் முறைகளை
மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர் விளைவு ஏமாற்றமாகத்தான் இருக்கும்.
மற்ற இன மக்களிடமும் நல்லப் பண்புகளும் இருக்கின்றன. நம்
இனத்திலும் ஒரு சில குறைகளும் உள்ளன. குறைகளைக் களைந்து நிறைகளை
நாடுவதுதான் பகுத்தறிவுக்கு அழகு. வாழ்ந்த நாட்டிலும் வாழும் நாட்டிலும்
உள்ள உயரியப் பண்புகளை ஏற்றுக்கொள்வதுதான் சரியானது என்று சாந்தினி
அருணோதயராஜ் கூறினார்.
நாம் பிள்ளைகளிடம் என்ன எதிர்ப்பார்க்கிறோம் என்பதை விட,
நம் பிள்ளைகள் நம்மிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதைப்
புரிந்துகொண்டால் பிரச்சனையில் பாதி தீர்ந்துவிடும். அதை நாம்
உணரமறுக்கின்றோம். என்ற செந்தில்குமாரின் கூற்றை எல்லோரும் ஏற்றுக்
கொண்டனர்.
பெற்றோரின் கடமையையும். பிள்ளைகளுக்கு இரு மொழிக் கல்வியால்
விளையும் நன்மையையும் பொன்னரசு, அறிவியல் ஆதாரத்துடன் விளக்கினார்.
பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிடவேண்டியதன் அவசியத்தையும் சொன்னது
மட்டுமல்லாமல், பிள்ளைகளின் மனதை அறிந்து, அவர்களைத் தோழனாகவும்
தோழியாகவும் பாவித்து வாழக் கற்றுக்கொள்ளாவிட்டால் கேடுதான் விளையும் என்று
சாந்தி சிவக்குமார் கூறினார்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? குழந்தையாக
இருக்கும்போதே அவர்களிடம் குடும்பப் பாசப் பிணைப்பை விதைத்துவிட்டால்
பிற்காலத்தில் அன்பை அறுவடையாகப் பெறலாம் என ருத்திராபதி குறிப்பிட்டார்.
கலாச்சார மாற்றமும் அறிவியல் மாற்றமும் மிகவேகமாக
வளர்ந்துவரும் இந்தக் காலத்தில் பெற்றோர்கள் சின்னச்சின்ன தியாகங்களை
செய்து குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவு செய்து பண்பாட்டுடன் சேர்ந்தத்
தமிழ்க் கல்வியை ஊட்டவேண்டும் என்று மருத்துவர் மீரா ரமணன் கூறினார்.
குழந்தைகளின் சுயமாக சிந்திக்கும் திறன் அந்தகாலத்தைவிட
இந்தக்காலத்தில் மிக அதிகமாகக் காணப்படுவதால் தாய்மொழியறிவும், பேசும்
திறனும் பெறுவதற்கு முன்பே குழந்தைகள் ஐபேட் போன்ற கருவிகளை எளிதாகப்
பயன்படுத்துகிறார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு நம்
பண்பாட்டுப் பின்னணியை சரியாக எதிரொலிக்கும் காணொளி, இசை, மற்றும் பாடல்களை
குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்று கணேசன் தம்பதி
குறிப்பிட்டனர்.
இது மெல்பேர்ன் வாழ் பெற்றோரின் பிரச்சனை மட்டுமல்ல. இந்தக்
கலாச்சார ஊடுருவல், தலைமுறை இடைவெளி என்பதை தமிழகமக்களும், மற்ற நாடுகளில்
வாழும் எல்லா தமிழினங்களும் சந்தித்து வருகின்றனர். எனவே இங்கு கூறப்பட்ட
பிரச்சனைக்கான தீர்வுகளை உலகமக்கள் அனைவரும் அறியத் தரவேண்டும் என்றும்
குழந்தைகளிடம் தமிழில் பேசுவதும், அவர்களுக்குத் தமிழ்க் கல்வி போதிப்பதும்
நம் முதற்கடமை என்றும் சுகுமாரன் கூறினார்.
எந்த நாட்டில், எந்த ஊரில், எந்த இன மக்களுடன்
வாழ்ந்தால்தான் என்ன? நன்மையும் தீமையும் நம்மால் வருவதே! எதை விதைக்கிறோமோ
அதைத்தானே அறுவடை செய்ய முடியும். நம் குழந்தைகளுக்காக நல்ல வாழும் சூழலை
அமைப்போம். அவர்கள் மனதில் நல்லொழுக்க விதைகளை விதைப்போம். நம்
கடைசிகாலத்தில் குழந்தைகளின் செழுமையான வளர்ச்சியைக்கண்டு மகிழ்வோம்.
வேறென்ன வேண்டும் நமக்கு?
No comments:
Post a Comment