பி.இ., படிப்பில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிள்ளைகளுக்கான
(என்.ஆர்.ஐ.,) இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நேற்று இப்பிரிவின்
கீழ், கலந்தாய்விற்கு வந்திருந்த பலர், அண்ணா பல்கலை அலுவலர்களுடன்
வாக்குவாதம் செய்தனர்.
அண்ணா பல்கலையின், கிண்டி
பொறியியல் கல்லூரி உள்ளிட்ட, நான்கு கல்லூரிகளில், பி.இ., படிப்பிற்கு உள்ள
மொத்த இடங்களில், 15 சதவீதம், என்.ஆர்.ஐ., ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது.
இதன்படி, இப்பிரிவின் கீழ் கலந்தாய்வில் பங்கேற்க, நேற்று, சென்னை, அண்ணா
பல்கலைக்கு, 250க்கும் மேற்பட்ட மாணவர் வந்திருந்தனர்.
"இவ்வளவு பேருக்கும் இடம் தர, கல்லூரிகளில் இடம் இல்லை" என பல்கலை
அலுவலர்கள் கூறியதால், ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்,
அவர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு, சிறிது நேரம்
பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, அண்ணா பல்கலை அலுவலர் ஒருவர் கூறுகையில், "கடந்த ஆண்டு
வரை, பி.இ., படிப்பில், எம்.ஆர்.ஐ., மாணவர்களுக்கு, 15 சதவீதமாக இருந்த,
இடஒதுக்கீடு, கோர்ட் உத்தரவுப்படி, 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட, 5 சதவீத இடங்கள், தொழில்துறையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் தான், எம்.ஆர்.ஐ., மாணவருக்கான இடங்கள் குறைந்துள்ளன" என்றார்.
ரஷீத் என்ற மாணவரின் தந்தை அனீப் கூறியதாவது: எங்கள் சொந்த ஊர்
திருச்சி. கலந்தாய்வில் பங்கேற்க, என் மகனுக்கு அழைப்பு கடிதம் வந்தது.
அதனால் தான், துபாயில் இருந்து, பல ஆயிரம் ரூபாய் பயணச் செலவு செய்து,
நேற்று, சென்னை வந்தோம். கடைசி நேரத்தில், அண்ணா பல்கலை அலுவலர்கள், என்
மகனுக்கு, இடம் இல்லை எனக் கூறினர்.
பிறகு ஏன், அவனுக்கு அழைப்பு கடிதம் அனுப்பினர் என, புரியவில்லை.
பல்கலையின் நிர்வாக குளறுபடியால், எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது தான்
மிச்சம். இவ்வாறு அனீப் கூறினார்.
No comments:
Post a Comment