அரசு வழங்கும் நிதி உரிய காலத்தில் கிடைக்காததால், கல்லூரிகளில், நாட்டு
நலப்பணி திட்டத்தை செயலாக்குவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
மாணவர்களிடையே சேவை மனப்பான்மையை உருவாக்க, தமிழகத்தில், 1,760
கல்லூரிகளில், நாட்டு நலப்பணி திட்டம் (என்.எஸ்.எஸ்.,) செயல்படுகிறது. ஒரு
யூனிட்டுக்கு, 500 பேர் என, ஒவ்வொரு கல்லூரியிலும், மாணவர்களின்
எண்ணிக்கைக்கு ஏற்ப, மூன்று முதல், ஐந்து யூனிட்கள் வரை செயல்படுகின்றன.
இவற்றில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுப்பினர்களாக
உள்ளனர். கண் சிகிச்சை முகாம், ரத்த தான முகாம், விழிப்புணர்வு பேரணி,
கருத்தரங்குகள், கிராமங்களை தத்தெடுத்தல் உள்ளிட்ட பணிகளை, திட்ட
அலுவலர்களுடன் இணைந்து, மாணவர்கள் மேற்கொள்கின்றனர்.
இதற்காக அரசு சார்பில், ஒரு யூனிட்டிற்கு, ஆண்டுக்கு, 22,500 ரூபாய்
வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் இந்த நிதி, கல்வியாண்டு துவக்கத்தில்
வழங்கப்படாமல், மார்ச், ஏப்ரல் என, கல்லூரி முடியும் காலங்களில்
வழங்கப்படுகிறது. இதனால் திட்ட அலுவலர்கள், நிகழ்ச்சிகளை நடத்த முடியாத
சூழ்நிலை ஏற்படுகிறது.
கல்வி ஆண்டு முடிய சில வாரங்களே உள்ள நிலையில் நிதி கிடைப்பதால், அவசர
கதியில், ஏதோ ஒரு நிகழ்ச்சியை நடத்தியதாக கணக்கு காட்டி, நிதியை செலவு
செய்கின்றனர். கல்வியாண்டுக்கு ஒதுக்கப்படும் நிதி, அந்த கல்வியாண்டு
முடிவதற்குள்ளேயே செலவிட வேண்டும் என்பதால், இந்நிலை ஏற்படுகிறது.
அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளை பொறுத்தவரை, கல்லூரி
நிர்வாகத்திடம் முன்பணம் பெற்று கொண்டு, நிகழ்ச்சிகளை நடத்தி
முடிக்கின்றனர். அரசு நிதி வந்ததும், பெற்ற நிதியை கல்லூரி நிர்வாகத்திற்கு
திருப்பி கொடுக்கின்றனர். ஆனால், அரசு கல்லூரிகளில் இந்த வாய்ப்பும்
இல்லை.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்
ஒருவர் கூறியதாவது: என்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகள் நடத்த, அரசு சார்பில்
வழங்கப்படும் தொகை மிகவும் குறைவு. ஒரு நிகழ்ச்சி நடத்த, 5,000 ரூபாய்
செலவாகிறது.
ஒரு ஆண்டுக்கு, 20 நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியுள்ளது. சில கல்லூரிகளில்
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், நன்கொடைகள் வாங்கி, நிகழ்ச்சிகளை
நடத்துகின்றனர். பெரும்பாலான கல்லூரிகளுக்கு நன்கொடை வாங்க அனுமதி இல்லை.
என்.எஸ்.எஸ்., நிதி, கல்வியாண்டு இறுதியில் கிடைப்பதால், தேர்வுக்கு
தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களை அழைத்து செல்வதில், பெரும் சிரமம்
ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, நாட்டு நலப்பணி திட்ட மாநில தொடர்பு அதிகாரி முருகேசன்
கூறுகையில், "மத்திய, மாநில அரசுகள், நிதியை தாமதமாக வழங்குவதால், இந்நிலை
ஏற்படுகிறது. எங்களிடம் நிதி தொகை வந்தவுடன், ஒரு வாரம் முதல், 10
நாட்களுக்குள் வழங்கப்படுகிறது" என்றார்.
ஆண்டொன்றுக்கு, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் நிகழ்ச்சிகளை நடத்த,
ஒரு யூனிட்டுக்கு, 22,500 ரூபாயை அரசு வழங்குகிறது. கடந்த இரண்டாண்டுகளாக,
இத்தொகையிலும், 5,000 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே வழங்கப்படும் தொகையை கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த முடியாத
சூழ்நிலையில், அதில், 20 சதவீத நிதியை, அரசு நிறுத்தி வைத்துள்ளது, திட்ட
அலுவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment