புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்
திட்டத்தில் படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட
ஆட்சியர் சம்பத் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: "படித்த இளைஞர்கள்
முதல் தலைமுறை தொழில்முனைவோராக மாற "புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில்
நிறுவன மேம்பாட்டுத் திட்டம்" என்ற புதிய திட்டத்தை 2012-13ம் ஆண்டு முதல்
செயல்படுத்த முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார்.
படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சியளித்து,
தொழில் துவங்க திட்டங்கள் தயாரித்து நிதி நிறுவனங்களில் நிதியுதவி பெற
உதவுவதுடன், பெரும் தொழில் நிறுவனங்களுடன் அவர்களுக்கு வணிகத் தொடர்பும்
அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவற்றின்
மூலம் 25 லட்சம் ரூபாய்க்கு மிகாத 25 சதவீத முதலீட்டு மானியம், மூன்று
விழுக்காடு வட்டிக் குறைப்புடன் கடன் பெற உதவி செய்யப்படும்.ஒவ்வொரு
ஆண்டும், இத்திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் 1000 தொழில்
முனைவோர்களுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 2013- 14ம் நிதி ஆண்டில் 37 தொழில் முனைவோர்
தேர்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 5
லட்சத்திற்கு மேல் 1 கோடி ரூபாய் வரையிலான திட்ட மதிப்பீடுள்ள ஹாலோ பிளாக்
தயாரித்தல், உலர்சாம்பல் செங்கல், பாக்குமட்டை தட்டு தயாரித்தல், சிஎன்சி
லேத் அமைத்தல், டிஜிட்டல் பிரிண்டிங், ஜெனரல் இன்ஜினியரிங், ஆயத்த ஆடைகள்
தயாரித்தல், பேப்பர் கப் தயாரித்தல், மாட்டுத் தீவனம் தயாரித்தல் போன்ற
உற்பத்தி தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அழகு நிலையங்கள், வாகனங்கள், ஹோட்டல், எர்த் மூவர்ஸ், கணினி
மையம், பிசியோதெரப்பி நிலையம், மருத்துவமனை சேவை தொழில்கள் துவங்க
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்தொழில்கள் துவங்கிட குறைந்த பட்ச வயது 21 முதல் 35 வயது
வரை இருத்தல் வேண்டும். சிறப்பு பிரிவினர் (மகளிர், தாழ்த்தப்பட்டோர்,
பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினர், முன்னாள்
ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்) 45 வயதுவரை இருக்கலாம்.
பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி மற்றும்
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பயின்ற தொழில்சார் பயிற்சி பெற்றிருக்க
வேண்டும். தமிழகத்தில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க
வேண்டும். ஆண்டு வருமானத்திற்கு வரையறை ஏதுமில்லை.
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு
திட்டத்தில் பெறப்படும் புதிய திட்டங்களுக்கு மட்டுமே உதவி செய்யப்படும்.
மத்திய அரசு அல்லது மாநில அரசின் வேறு ஏதாவது திட்டத்தின்கீழ் நிதியுதவி
பெற்றிருந்தால், இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இயலாது.
விண்ணப்பதாரர் எந்த ஒரு வங்கியிலும் அல்லது தமிழ்நாடு
தொழில் முதலீட்டுக் கழகத்திலும் கடன் பெற்று தவணை செலுத்தத் தவறியவராக
இருக்கக் கூடாது. மாவட்டத்தில் தகுதியுடைய தொழில் முனைவோர்கள் உரிய திட்ட
அறிக்கையுடன், விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொது
மேலாளரிடம் நேரில் விண்ணப்பித்து பயனடையலாம்." இவ்வாறு செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment