மூன்று மணி நேரம்தான். அதற்குள் கேட்பவற்றை சிறப்பாக எழுதி முடித்துவிட
வேண்டும். புத்தகத்தில் உள்ளதையே எழுத வேண்டும். முழு மதிப்பெண்ணை
எடுத்தால்தான், நினைத்த மேற்படிப்பை படிக்க முடியும்.
இந்த கல்விமுறையால்,
மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தங்களுக்கு அளவேயில்லை. வெறுமனே அரசு
தேர்வுகளுக்கு தயாராகும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மன அழுத்தம்
ஏற்படுவதில்லை. கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு படிப்பவர்கள்,
தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பவர்கள் உள்பட, அனைத்து தரப்பாருக்குமே,
படிப்பு தொடர்பான மன அழுத்தங்கள் உண்டு.
எனவே, இங்கே படிப்பது என்பதுதான் முக்கிய அம்சம். அது பள்ளியா,
கல்லூரியா, தொலைநிலைக் கல்வியா அல்லது போட்டித் தேர்வுக்கு படிப்பதா என்பது
விஷயமல்ல. தேர்வுக்கு படிக்கும் டென்ஷனிலிருந்து விடுபடுவதற்கு பல
மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இக்கட்டுரை, சிறப்பான முறையில் எப்படியெல்லாம் படிக்கலாம் என்று அலசுகிறது.
பொருத்தமான நேரம்
படிப்பதற்கென்று, இதுதான் பொருத்தமான நேரம் என்பதெல்லாம் இல்லை. நமக்கு
எந்த நேரம் வசதியாகவும், உற்சாகமாகவும் படுகிறதோ, அந்த நேரத்தையே,
படிப்பதற்கு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பொதுவாக, இரவு 10.30 மணிக்குமேல்
உலகம் அமைதியாக இருக்கும். சிலருக்கு அந்த நேரம் மிகவும் பிடிக்கும்.
சிலருக்கு அதிகாலை 3 மணி அல்லது 4 மணிக்கு எழுந்து படிப்பது பிடிக்கும்.
சிலருக்கு, நண்பகல் வேளையில் படிப்பது பிடிக்கும். எனவே, இது அவரவர்
உடல்நிலையையும், விருப்பத்தையும் பொறுத்தது. இதுதான் சிறந்த நேரம்
என்றெல்லாம் எதுவும் இல்லை.
ஆரம்பத்திலிருந்தே படிக்கத் தொடங்குதல்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, தினந்தோறும் தங்களின் பாடங்கள்
வகுப்பறைகளில் அறிமுகப்படுத்தப்படுவதால், அவர்களுக்கு பெரியளவில்
பிரச்சினையில்லை. ஆனால், தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பவர்கள், தேர்வு
நெருங்கும் நேரம்வரை அலட்சியமாக விட்டுவிடுவார்கள். தங்களின் புத்தகங்களையே
தொட மாட்டார்கள். தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன எனும் நிலை
வரும்போதுதான், அவர்களின் பலர் படிக்கவே தொடங்குகின்றனர்.
இதனால், பலர், மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். தொலைநிலைத் தேர்வை
வெறுமனே நிறைவுசெய்ய வேண்டும் என்று எழுதுகிறவர்களைவிட, அதில் அதிக
மதிப்பெண்கள் பெற்று மேல்நிலைப் படிப்பிற்கு செல்ல வேண்டும் என்று
நினைப்பவர்களுக்கு அதிக மனஅழுத்தம் ஏற்படுகிறது. எனவே, ஆரம்பத்திலிருந்தே
வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களை படிக்கத் தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான்
இறுதி நேரத்தில் திருப்புதலை மேற்கொண்டு, சிறப்பாக எழுதி, அதிக
மதிப்பெண்களைப் பெற முடியும்.
போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரை சொல்லவே வேண்டாம். ஆரம்பம் முதலே கடினமாக படித்தால் மட்டுமே, அவற்றில் வெற்றிபெற முடியும்.
திட்டம் வகுத்தல்
என்னதான் கடினமாக உழைத்தாலும், திட்டமிட்டு உழைப்பவனே வெற்றியடைவான்
என்பது பிரபலமான அறிவுரை மொழி. அதற்கேற்ப, என்னதான் அதிகநேரம் படித்தாலும்,
திட்டமிட்டு, தெளிவான புரிதலுடன் படித்தால்தான் பயன் கிடைக்கும். இந்த
நாளுக்குள் இந்தப் பாடத்தை முடித்துவிட வேண்டும் மற்றும் இதை இத்தனைமுறை
திரும்ப திரும்ப படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள
வேண்டும்.
இல்லையெனில், எதற்கு எதைப் படித்தோம் என்று குழம்பி, தேர்வை
எழுதுகையில், பலவற்றை மறந்து, சொதப்பி விடுவோம். எனவே, திட்டமிட்டு
சிறப்பாக படித்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமானவற்றை குறிப்பிடல்
படிக்கும்போது முக்கியமான பாயின்டுகள் என்று தோன்றுபவைகளை பென்சிலின்
மூலம் அடிக்கோடிட்டுக் கொண்டால், அவற்றை திரும்ப படிக்கும்போது எளிமையாக
இருக்கும். மேலும், ஆங்கிலம் போன்ற வேற்றுமொழிகளில் பாடங்களைப்
படிக்கையில், பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கும். எனவே,
அதற்கான அர்த்தங்களை, அந்தந்த பக்கங்களிலேயே எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
இதன்மூலம், நன்றாக புரிந்து படிக்க முடியும்.
போதுமான இடைவெளி
படிக்கையில், தொடர்ந்து பல மணிநேரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து
படிக்கையில், சோர்வு ஏற்படுவதை தவிர்ப்பது கடினம். எனவே, தேவைப்படும்
நேரத்தில், சிறிய சிறிய இடைவெளிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து
உட்கார்ந்தே படித்தால், சிறிதுநேரம் நடந்துகொண்டு படிக்கலாம். சிறிதுநேரம்
கீழே அமர்ந்துகொண்டோ, எழுத்து மேசை பயன்படுத்தியோ அல்லது மேசை
பயன்படுத்தியோ, இவ்வாறு மாறி மாறி செயல்பட்டு, நமது சோர்வை விரட்டலாம்.
வழக்கமாக படுக்கும் கட்டிலின் மீது, இரவில் அமர்ந்து படிப்பதை
தவிர்ப்பது நல்லது. ஏனெனில், பலருக்கு, இரவில் அதன்மீது அமர்ந்து
படிக்கையில், விரைவில் தூக்க உணர்வு ஏற்படும்.
எவ்வளவு மதிப்பெண்?
தேர்வுக்கு படிக்கும்போதே, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்
எடுத்தால்போதும், 60 எடுத்தால்போதும் அல்லது 80 எடுத்தால்போதும் என்று
நினைத்துப் படிப்பது பெரும் தவறு.
முடிந்தவரை, அனைத்து விஷயங்களையும் படிக்க வேண்டும். முழு
மதிப்பெண்களுக்கு குறிவைத்து எழுத வேண்டும். அதேசமயம், Objective type
தேர்வுகளில் நெகடிவ் மதிப்பெண் உள்ள தேர்வுகளை எழுதுகையில் கவனமாக செயல்பட
வேண்டும். மற்றபடி, இதர விரிவான எழுத்துத் தேர்வுகளில், முழு
மதிப்பெண்களுக்கும் எழுத வேண்டும்.
அடுத்தவரை பின்பற்ற முயல வேண்டாம்
உங்களின் நண்பர் படிக்கும் முறை உங்களுக்கு ஒத்துவரலாம் அல்லது
ஒத்துவராமல் போகலாம். உங்களின் நண்பர் அதிக மதிப்பெண்களைப் பெறுபவராகவும்
இருக்கலாம். ஆனால், அதற்காக அவரையேப் பின்பற்ற வேண்டும் என்கிற கட்டாயம்
இல்லை. உங்களுக்கு ஒத்துவராத முறையினால், உங்கள் படித்தல் செயல்பாட்டில்
மிகப்பெரிய பின்னடைவு ஏற்படவும் வாய்ப்புண்டு.
எனவே, எந்தமுறையில் படித்தால் உங்களுக்கு விரைவில் சோர்வு ஏற்படாதோ,
எளிதில் கிரகிக்க முடியுமோ, அதிகளவு படிக்க முடியுமோ, அந்த முறையையே
பின்பற்றி, வெற்றிபெற முயற்சிக்க வேண்டும்.
No comments:
Post a Comment