"பள்ளி கட்டடங்களுக்கு உள்ளூர் திட்டக்குழும அனுமதி தேவை, என்ற உத்தரவை
ரத்து செய்ய வேண்டும்" என, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க
நிர்வாகிகள் கூறினர்.
இந்த அமைப்பின் மாநில தலைவர் கலைவிஜயகுமார், மதுரை மாவட்ட தலைவர்
ராமச்சந்திரன், செயலாளர் நீலமேகம், பொருளாளர் சொக்கலிங்கம் கூறியதாவது:
நர்சரி, மெட்ரிக் பள்ளிகள், பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றன. பள்ளி
வாகனங்களுக்கு விதித்த, 16 புதிய நிபந்தனைகளை பூர்த்தி செய்தாலும்,
போக்குவரத்து அதிகாரிகள், தகுதிச் சான்று வழங்குவதை, திட்டமிட்டே
தாமதப்படுத்துகின்றனர்.
"மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு" எனக்கூறி இழுத்தடிக்கின்றனர்;
இதனால், மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர இயலவில்லை. தமிழகத்தில், 1700
மெட்ரிக் பள்ளிகள், கடும் நிபந்தனைகளின் காரணமாக அங்கீகாரம்
புதுப்பிக்கப்படாமல் உள்ளது. மாநகராட்சியில் பள்ளி துவக்க, 6 கிரவுண்ட்
இடம் போதும் என்ற நிலையில், கிராமப்புற பள்ளிகளுக்கு 3 ஏக்கர் என
நிர்ணயிப்பது ஏன்? "பள்ளிக் கட்டடங்களுக்கு, உள்ளூர் திட்டக்குழுமத்தில்
அனுமதி பெற வேண்டும்" என, நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
உள்ளாட்சி நிர்வாகத்தில் அனுமதி பெற்றுதான், பள்ளிகள் நடக்கின்றன. எனவே
அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சியில், பள்ளிகளுக்கு
சொத்துவரியில் விலக்கு உள்ளதைப் போல, கிராமப்புறத்திலும், விலக்கு அளிக்க
வேண்டும்.
பள்ளி அங்கீகாரத்தை, 3 ஆண்டில் இருந்து 5 ஆண்டாக அதிகரிப்பதுடன், 20
ஆண்டுகள் முறைகேடின்றி நடக்கும் பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்க
வேண்டும். இதுகுறித்து, கல்வி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சரையும்
சந்தித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment