ராகிங் கொடுமையை முற்றிலுமாக ஒழிக்கத் தேவையான ஏற்பாடுகளை, கல்லூரி
முதல்வர்களும், துறைத் தலைவர்களும் மேற்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம்
அறிவுறுத்தியுள்ளது.
கல்வி நிறுவனங்களில், "ராகிங்"
தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலும், கல்லூரி நிர்வாகம், அரசுக்கு தெரியாமல்
ஆங்காங்கே, கொடுமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. ராகிங்கை மத்திய, மாநில
அரசுகள் கடுமையான குற்றமாக அறிவித்துள்ளன; கடுமையான தண்டனைகளும்
வழங்கப்படுகின்றன.
ராகிங் குற்றத்தில் ஈடுபடும் மாணவர்கள் கல்வி நிறுவனங்களிலிருந்து
நீக்கப்படுவதுடன், வேறு மாநிலங்களிலுள்ள கல்லூரிகள், பல்கலைகளில் சேர்ந்து
படிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. குற்றத்தின் தன்மையை பொறுத்து,
மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும்
விதிக்கப்படலாம்.
ராகிங்கால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படும் மாணவர்கள்
சிலர், தற்கொலை வரை செல்கின்றனர்; இதனால் வரும் முன்விரோதத்தால் சிலர் கொலை
செய்யப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது.
சென்னை அருகே "ராகிங்" தொல்லையால் கல்லூரி மாணவர் ஒருவர், சமீபத்தில்
உயிரிழந்தார். கடந்த 24ம் தேதி முதல் கல்லூரிகளில் முதலாமாண்டு
மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில், ராகிங்கை ஒழிக்க அரசு
பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து ராகிங் தடுப்பு
குறித்து கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்
கூறியுள்ளதாவது: ராகிங் கொடுமை நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ராகிங் குறித்து புகார் பெறும் ஆசிரியர்களின் பெயர், முகவரி, போன்
எண்களை கல்லூரி அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும். இது தொடர்பான, புகார்
பெட்டி மற்றும் ஆலோசனைப் பெட்டியை அமைத்து, ராகிங் அறவே ஒழிக்கத் தேவையான
ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வர்களும், துறைத் தலைவர்களும் மேற்கொள்ள
வேண்டும்.
இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கல்லூரி முதல்வர்கள்,
இயக்குனர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு,
சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகிங் கொடுமைக்கு எதிரான நடவடிக்கைக்காக உச்சநீதி மன்ற வழிகாட்டுதல்
நகல் மற்றும் டில்லி மனித வள மேம்பாடுத் துறையின் கடித நகலும்
அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் 1800-180-5522 என்ற ராகிங்
தடுப்பு ஹெல்ப் லைன் உருவாக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் இந்த இலவச டோல் எண்ணில் பாதிப்புக்குள்ளாகும்
மாணவர்கள் புகார் அளிக்கலாம்; கவுன்சிலிங்கும் வழங்கப்படுகிறது. இது
தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, பெங்காலி,
பஞ்சாபி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் செயல்பட்டு வருகிறது.
கல்லூரிகளில் புகார் தர பயப்படும் மாணவர்கள் இதில் தொடர்பு கொள்ளலாம்.
மையத்திலிருந்து சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு புகார் அனுப்பப்பட்டு, ஏழு
நாட்களுக்குள் புகார் மீதான நடவடிக்கை விபரம் பெறப்படுகிறது.
No comments:
Post a Comment