மாற்றுத் திறனாளிகளுக்கான, எம்.பி.பி.எஸ்., இடங்களை, மருத்துவக் கல்வி
இயக்ககம், முறைகேடாக பயன்படுத்தி வருகிறது என தமிழ்நாடு மாற்றுத்
திறனாளிகள் சங்கங்களுக்கான கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு,
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில், 3 சதவீதம், சிறப்பு
பிரிவினரான மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த
ஆண்டு, மருத்துவ படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க, ஊனமுற்ற, 131 மாற்றுத்
திறனாளிகள் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில், 81 பேருக்கு, கலந்தாய்விற்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை,
மருத்துவக் கல்வி இயக்ககத்தில், நேற்று நடந்தது. இதில், கிருஷ்ணகிரி
மாவட்டம், பர்கூரைச் சேர்ந்த, ரோசி என்ற மாற்றுத் திறனாளியை பரிசோதித்த
மருத்துவக் குழு, அவரது, கால் ஊனத்தின் அளவு, 80 சதவீதம் என, மதிப்பிட்டது.
இதே விண்ணப்பதாரருக்கு, மருத்துவக் கல்வி இயக்ககத்தால் நியமிக்கப்பட்ட
மருத்துவக் குழுவினர், கடந்த ஆண்டு, அவரது கால் ஊனத்தின் அளவை, 70 சதவீதம்
என, மதிப்பிட்டிருந்த நிலையில், ஓராண்டில், ஊனத்தின் அளவில் எப்படி மாற்றம்
வரும் என, விண்ணப்பதாரர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களுக்கான
கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலர் சிம்மசந்திரன் கூறியதாவது: மருத்துவ
படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாற்றுத் திறனாளிகளின் ஊனத்தின் அளவு, 70
சதவீதத்திற்கு மேல் இருந்தால், அவர்கள், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர
முடியாது என்ற விதியை, நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால், இந்த விதியையே காரணமாகக் கொண்டு, சென்னை, கே.கே.நகர் அரசு
புனர்வாழ்வு மருத்துவமனையின் மருத்துவக் குழுவால், ஊனத்தின் அளவு, 70
சதவீதம் மற்றும் அதற்கு கீழ் உள்ளதாக மதிப்பிடப்பட்ட விண்ணப்பதாரர்களில்
பலருக்கு, மருத்துவக் கல்வி இயக்ககத்தால், நியமிக்கப்படும் மருத்துவக்
குழுவினர், 70 சதவீதத்திற்கு மேல் ஊனம் உள்ளதாக, மதிப்பிடுகின்றனர்.
இந்த மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான , 54
எம்.பி.பி.எஸ்., இடங்களை, முழுவதும் அவர்களைக் கொண்டு நியமிக்காமல்,
ஆண்டுதோறும் குறிப்பிட்ட இடங்களை, பொது பிரிவு மாணவர் சேர்க்கைக்கென,
முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான, 54 எம்.பி.பி.எஸ்., இடங்களில்,
43 இடங்கள், அவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டதாக தெரிவித்துள்ள, மருத்துவக்
கல்வி இயக்ககம், மீதியிருந்த, 11 இடங்களை, யாரைக் கொண்டு நிரப்பியது
என்பது, இதுவரை மர்மமாக உள்ளது.
இந்த விஷயத்தில், சுகாதார துறை அமைச்சர், வீரமணி, உடனடியாக தலையிட்டு,
மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டு, எம்.பி.பி.எஸ்., இடங்கள்
முழுவதும், சரியான முறையில் நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு
சிம்மசந்திரன் கூறினார்.
இந்நிலையில், நேற்று கலந்தாய்வில் பங்கேற்ற, 76 மாற்றுத் திறனாளிகளில்,
70 சதவீதத்திற்கு மேல் ஊனம், இடுப்பு பகுதிக்கு மேல் ஊனம் உள்ளிட்ட
காரணங்களால், 31 பேர், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேரும் தகுதியை இழந்தனர்.
மீதியுள்ள, 45 பேர், இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படிக்க தேர்வு
செய்யப்பட்டுள்ளனர் என, மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு
செயலர் சுகுமார் கூறினார்.
No comments:
Post a Comment