அங்கீகாரம் பெறாத மழலையர் பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில், அதிக
கட்டணம் வசூலிக்கும், "கிண்டர் கார்டன்" (மழலையர்) பள்ளிகள் கண்காணிப்படுமா
என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில், 7,000த்திற்கும்
மேற்பட்ட மழலையர், துவக்கப் பள்ளிகளும், 4,500க்கும் மேற்பட்ட
மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளும், 650க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ.,
பள்ளிகளும் செயல்படுகின்றன. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று
வருகின்றனர்.
நர்சரி, பிரைமரி பள்ளிகளில், அடிப்படை வசதியில்லை என கூறி, 900 பள்ளிகளை
மூட, அரசு உத்தரவிட்டது. இதில், 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்ட
நிலையில், மீதமுள்ள பள்ளிகளை மூட, நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
அடிப்படை வசதி மற்றும் அங்கீகாரமின்றி செயல்பட்டதாகக் கூறி, இப்பள்ளிகளை
மூடி வரும் நிலையில், தமிழகத்தில், "கிண்டர் கார்டன்", "ஆப்பிள் கிட்ஸ்",
"ஆரஞ்ச் இன்டர்நேஷனல் ஸ்கூல்", "பிளே ஸ்கூல்", "பப்ளிக் ஸ்கூல்" என பல
பெயரில் மழலையர் பள்ளிகள் செயல்படுகின்றன.
இதில், பிரி.கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., உள்ளிட்ட வகுப்புகள்
நடத்தப்படுகின்றன. இரண்டு மணி நேரம் வகுப்புகளுக்கு, ஆண்டுக்கு, 50 ஆயிரம்
முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரசின்
அங்கீகாரமின்றி இப்பள்ளிகள் செயல்படுகின்றன.
பணத்தை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படும் இப்பள்ளிகளை, அரசு
கண்காணிப்பதில்லை. பொறியியல் படிப்பு கட்டணத்தை விட, அதிக பணம் வசூலிக்கும்
இப்பள்ளிகளை முறைப்படுத்த, எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுபோல, சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., கேம்பிரிட்ஜ் பள்ளி என, பல்வேறு
பெயர்களில் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இதில், 10ம் வகுப்பு வரை வகுப்புகள்
எடுக்கப்படுகின்றன. இதற்கு கல்விக் கட்டணமாக, 50 ஆயிரம் ரூபாய் வரை
வசூலிக்கப்படுகிறது. இவற்றை முறைப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுப்பதில்லை
என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்
பள்ளி சங்கத் தலைவர், நந்தகுமார் கூறியதாவது: குழந்தைகளின் பாதுகாப்புக்கு
உத்தரவாதம் இல்லாத, எந்தவித அடிப்படை வசதியும் இன்றி செயல்பட்ட மழலையர்,
துவக்கப் பள்ளிகளை மூடுவது வரவேற்கத்தக்கது.
500க்கும் மேற்பட்ட மழலையர், துவக்கப் பள்ளிகள் பல ஆண்டுகளாக
விண்ணப்பித்தும், காத்திருந்தும் அப்பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்காமல்
இழுத்தடிப்பது கண்டிக்கத்தக்கது.
சமச்சீர் கல்வித் திட்டம் காரணம் காட்டி, தரமான கல்வி வழங்குவதாகக்
கூறி, புதிதாக 500க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, அனுமதி
வழங்கியுள்ளது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகள்
அங்கீகாரம் பெறாமலே செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு நந்தகுமார் கூறினார்.
தமிழகத்தில், மூடப்பட்டு வரும், 900 மழலையர், துவக்கப் பள்ளிகளில்,
200க்கும் மேற்பட்ட, மழலையர் பள்ளிகள் தனியாகச் செயல்படுகின்றன. "மழலையர்
வகுப்புகளுக்கு கட்டாய கல்விச் சட்டத்தின்படி அங்கீகாரம் பெற
வேண்டியதில்லை" என டில்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கட்டாய கல்வி சட்டம் காட்டி, தற்போது, தமிழகத்தில்,
200க்கும் மேற்பட்ட நர்சரி பள்ளிகள் மூடப்பட உள்ளன. எனவே, மழலையர்
பள்ளிக்கு அங்கீகாரம் பெற வேண்டுமா, இல்லையா என்பதை, மாநில அரசு
தெளிவுபடுத்த வேண்டும் என, கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment