எம்.பி.பி.எஸ்., படிப்பில் இடம் ஒதுக்கக் கோரி, மாற்றுத் திறனாளி மாணவி,
சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மனுவுக்குப் பதிலளிக்க
உத்தரவிட்டு, விசாரணையை, ஜூலை, 1ம் தேதிக்கு, ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், இஞ்சிமேடு
கிராமத்தைச் சேர்ந்த, நளினி என்பவர், தாக்கல் செய்த மனு: பிளஸ் 2
தேர்வில், 1071, மதிப்பெண் பெற்றேன். சிறிய வயதில், விபத்தில் சிக்கினேன்.
மூட்டுக்கு கீழ், செயற்கை கால் பொருத்தப்பட்டது. எனக்கு, 60 சதவீத ஊனம்
இருப்பதாக, மாவட்ட அதிகாரிகள் சான்றளித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டின்
கீழ், விண்ணப்பித்தேன். இந்த ஒதுக்கீட்டின் கீழ், 54, இடங்கள் உள்ளன.
திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ குழு, மருத்துவப் பரிசோதனை செய்து, 65 சதவீத
ஊனம் இருப்பதாக, சான்றிதழ் அளித்தது.
இம்மாதம், 18ம் தேதி, கவுன்சிலிங் நடந்தது. டாக்டர்கள் முன்,
ஆஜராகும்படி கூறினர். அவர்கள், என்னை பரிசோதித்தனர். எனக்கு, 75 சதவீத ஊனம்
இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், மருத்துவப் படிப்பில் சேர, எனக்கு
தகுதியில்லை என்ற நிலை ஏற்பட்டது. என்னால் நிற்க, நடக்க, ஓட முடியும்.
ஏற்கனவே, மாவட்ட மருத்துவ அதிகாரி, 60 சதவீத ஊனம் இருப்பதாக, சான்றிதழ்
அளித்த பின், மாவட்ட மருத்துவ குழுவும், 65 சதவீதம், என, சான்றிதழ்
அளித்தது. இதை எல்லாம் பரிசீலிக்காமல், மீண்டும், டாக்டர்கள் குழுவை
வைத்து, பரிசோதனை நடத்தினர்.
எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, எனக்கு தகுதியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில், ஒன்பது இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களை நிரப்பவில்லை என்றால், மற்றவர்களை கொண்டு நிரப்பி விடுவர்.
எனவே, மாற்று திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில், ஒரு இடத்தை காலியாக
வைத்திருக்க உத்தரவிட வேண்டும். எம்.பி.பி.எஸ்., படிப்பில், என்னை சேர்க்க
உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி சசிதரன் விசாரித்தார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி,
அரசு வழக்கறிஞர் ராஜேந்திர பிரசாத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூலை,
1ம் தேதிக்கு, நீதிபதி சசிதரன் தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment