"அண்ணா பல்கலையின் இணைப்பு பெற, ஏ.ஐ.சி.டி.இ.,யின் ஒப்புதல் உத்தரவை
வலியுறுத்தாமல், தனியார் பொறியியல் கல்லூரியின் விண்ணப்பத்தை பரிசீலிக்க
வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம்,
குமாரபாளையத்தில் உள்ள, எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லூரி சார்பில், தாக்கல்
செய்யப்பட்ட மனு: கடந்த, 15 ஆண்டுகளாக, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி
கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) ஒப்பதல் பெற்று, கல்லூரியை நடத்தி வருகிறோம்.
இந்த கல்வியாண்டுக்கு, ஒப்புதல் வழங்க, ஏ.ஐ.சி.டி.இ., மறுத்து விட்டது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு ஆலோசனை வழங்க மட்டுமே
முடியும். ஏ.ஐ.சி.டி.இ.,யின் ஒப்புதல் பெற வேண்டும் என, அண்ணா பல்கலை,
நிபந்தனை விதித்து, உத்தரவிட்டுள்ளது. இந்த நிபந்தனையை ரத்து செய்ய
வேண்டும்.
ஒற்றைச் சாளர முறையில், மாணவர்கள் சேர்க்கைக்கான, கல்லூரிகள்
பட்டியலில், எங்கள் கல்லூரியையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு, மனுவில்
கூறப்பட்டுள்ளது. மனுவை, நீதிபதி சசிதரன் விசாரித்தார். மனுதாரர் சார்பில்,
மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமி, வழக்கறிஞர் கந்தவடிவேல் ஆஜராகினர்.
நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவு: அண்ணா பல்கலையின் இணைப்பு கோரி,
மனுதாரர் கல்வி நிறுவனம், கடந்த மாதம், விண்ணப்பித்துள்ளது. பல்கலை
தரப்பில், சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து, அண்ணா
பல்கலையிடம், கல்லூரி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஏ.ஐ.சி.டி.இ.,யின் ஒப்புதல் தேவை என, வலியுறுத்தாமல், மற்ற நிபந்தனைகளை
பூர்த்தி செய்யும் பட்சத்தில், விண்ணப்பத்தை பரிசீலித்து, தகுந்த
உத்தரவுகளை, அண்ணா பல்கலை பிறப்பிக்க வேண்டும்.
எனவே, தகுதி அடிப்படையில், சட்டப்படி, விண்ணப்பத்தை பரிசீலித்து
உத்தரவிட வேண்டும். தற்போது, கவுன்சிலிங் நடவடிக்கையை துவங்கும் பணியில்,
அண்ணா பல்கலை உள்ளதால், விண்ணப்பத்தை விரைந்து பைசல் செய்ய வேண்டும்.
இம்மாதம், 28ம் தேதிக்குள், பைசல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதி
சசிதரன் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment