இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, தேசிய பொது மருத்துவ நுழைவுத்
தேர்வான, என்.இ.இ.டி., முடிவுகள் 5ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்ச்சி அடைந்த
மாணவர்கள் எப்படி கவுன்சிலிங்கில் கலந்துகொள்வது? மற்றும் அட்மிசன்
விபரங்கள் போன்றவை குறித்து தெளிவான தகவலின்றி தவித்து வருகின்றனர்.
எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு, தேசிய அளவிலான
என்.இ.இ.டி. (நீட்)நுழைவுத் தேர்வை, சி.பி.எஸ்.இ., கடந்த மாதம் நடத்தியது.
நாடு முழுவதும், 85 நகரங்களில், 1,253 மையங்களில் நடந்த
இத்தேர்வில், மொத்தம், 6.58 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் 3.66 லட்சம்
பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கவுன்சிலிங் நடைமுறைகள் என்ன?
சி.பி.எஸ்.இ. இன் இணையதளத்தில் கூறியுள்ளதாவது, "நீட்
கவுன்சிலிங்கின்போது சி.பி.எஸ்.இ. விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளவாறு இடங்கள்
ஒதுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் அனைத்து இந்திய இட ஒதுக்கீடு, மாநில இட
ஒதுக்கீடு, மத்திய இட ஒதுக்கீடு, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாதுகாப்பு
படை மருத்துவ கல்லூரிகள், மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் இட
ஒதுக்கீடு என எந்த கல்வி நிறுவனத்திற்கு விண்ணப்பித்து இருக்கின்றனரோ
அதற்கு ஏற்றவாறு கவுன்சிலிங் நடைமுறைகள் மாறுபடும்.
நீட் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அனைத்து இந்திய அளவில் 15%
இட ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய கல்வி நிறுவனங்கள், மாநில
கல்வி நிறுவனங்கள் போன்றவை, அந்தந்த மருத்துவ கல்வி இயக்கக நடைமுறைகளின்படி
இட ஒதுக்கீட்டை அளிக்கின்றன. தனியார் கல்லூரிகள் அவை இருக்கும் மாநில
அரசாங்கத்தின் நடைமுறைகளின்படி இட ஓதுக்கீட்டை அளிக்கின்றன." இவ்வாறு
இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவர்கள் கூறும்பொழுது, "கவுன்சிலிங்
எப்பொழுது நடக்கும்?, விண்ணப்பிப்பது எப்படி?, பொதுவான விண்ணப்பங்கள்
இருக்கிறதா?, விண்ணப்பிக்க இறுதி நாள் எது?, யாரை சந்தேகங்களுக்கு தொடர்பு
கொள்வது? என்ற விபரங்கள் சரியாக எங்களுக்கு தெரியவில்லை. இது பற்றி
சி.பி.எஸ்.இ. ஐ தொடர்பு கொண்டபோது டில்லி அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு
கூறினர். டில்லி உதவி எண்ணை எப்பொழுது தொடர்பு கொண்டாலும் அழைப்பை எவரும்
ஏற்பதில்லை. சென்னை மருத்துவ கல்வி இயக்கத்தை தொடர்பு கொண்டபோதும்,
இயக்ககத்தின் இணையதளத்தில் தேடியபோதும் இது தொடர்பான தெளிவான தகவல் இல்லை."
என்றனர்.
நீட், ஜெ.இ.இ. போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில்,
தமிழக மாணவர்களின் பங்களிப்பு போதிய அளவில் இல்லை என கல்வியாளர்கள்
வருத்தப்படும் நிலையில், தெளிவான தகவல்கள், நடைமுறைகள் இல்லாதது மேலும்
மாணவர்களிடையே ஆர்வத்தை குறைக்கும் என்பது கல்வியாளர்களின் கருத்து.
No comments:
Post a Comment