நெல்லை மாவட்டத்தில் அனைத்து அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில்
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 தேர்ச்சி சதவீத ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க தலைமை
ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் பாளை மேரி சார்ஜென்ட் மேல்நிலைப் பள்ளியில்
நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) கஸ்தூரிபாய் தலைமை வகித்தார்.
இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் டோரா, வசந்தி, பத்மா, முதன்மை கல்வி
அலுவலரின் நேர்முக உதவியாளர் ஷேக், சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர்
கஜேந்திரபாபு உட்பட பலர் பேசினர். மாவட்டத்தில் 10ம் தேதி பள்ளிகள்
அனைத்தையும் திறக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
பள்ளிகள் திறந்த அன்றே மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் கிடைக்கும்
வகையில் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இந்த கல்வி ஆண்டில் பள்ளி
தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து
விவாதிக்கப்பட்டது.
ஒவ்வொரு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி வாரியாக எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்
2 தேர்ச்சி சதவீத ஆய்வறிக்கையை அந்தந்த தலைமை ஆசிரியர்கள் சமர்ப்பிக்க
உத்தரவிடப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் அரசு விலையில்லா
பொருட்களை எந்தவித முறைகேடுகள் இல்லாமல் உரிய முறையில் வழங்க வேண்டும்.
இதனை மீறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிக கட்டணம் வசூல் செய்யும் அரசு பள்ளிகள் கண்காணிக்கப்படும். அதிக
கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் குறித்து மாவட்ட கல்வி அலுவலகங்கள்,
முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் செய்யலாம். எந்தவித புகார்களுக்கும்,
முறைகேடுகளுக்கும் இடமளிக்காத வகையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியாற்றி
கல்வி தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
என தெரிவிக்கப்பட்டது.
புத்தக திருவிழா:பாளையில் முதன் முறையாக நடக்கும் புத்தக திருவிழாவில்
அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்று தேவையான புத்தகங்களை வாங்கி
செல்ல வேண்டும். இத்திருவிழாவில் கலந்து கொள்ள ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ,
மாணவிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
புத்தக திருவிழாவை வெற்றி பெற செய்ய அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க
வேண்டும் என்று புத்தக திருவிழா குழு நிர்வாகிகள் மயன் ரமேஷ்ராஜா, ஓய்வு
பெற்ற தாசில்தார் தாமோதரன், அப்பாசி, ஷாஜகான், கிருஷி உட்பட பலர்
வலியுறுத்தி பேசினர்.
No comments:
Post a Comment