பி.இ., படிப்பில் சேர, மாணவியர் மத்தியில் ஆர்வம் இல்லாதது, தெரிய
வந்துள்ளது. பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்ட, 1.89 லட்சம்
விண்ணப்பங்களில், மாணவியர் எண்ணிக்கை, வெறும், 74 ஆயிரம் தான். மாணவர்கள்,
1.14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த மாதம், பி.இ., படிப்பில்
சேர்வதற்கான விண்ணப்பங்களை, அண்ணா பல்கலை வழங்கியது. 2.35 லட்சம்
விண்ணப்பங்கள், விற்பனை ஆயின. ஆனால், 1.89 லட்சம் மாணவர்கள் மட்டும்,
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஒப்படைத்துள்ளனர். இந்த மாணவர்கள்
அனைவருக்கும், ரேண்டம் எண்கள் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி, அண்ணா பல்கலை
வளாகத்தில், நேற்று காலை நடந்தது.
இதை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், துவக்கி வைத்தார். அமைச்சர், உயர்
கல்வித்துறை செயலர் அபூர்வ வர்மா, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம்
உள்ளிட்டோர், பத்து இலக்க எண்களை பதிவு செய்தனர். இதன்பின், கம்ப்யூட்டர்,
1.89 லட்சம் மாணவர்களுக்கும், ரேண்டம் எண்களை ஒதுக்கீடு செய்தது.
நிகழ்ச்சியில், பி.இ., சேர்க்கை செயலர் ரைமண்ட் உதிரியராஜ்
பேசியதாவது:வரும், 12ம் தேதி, அனைத்து மாணவர்களுக்கும், "ரேங்க்&'
பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியல் தயாரிக்க, ரேண்டம் எண்கள்
உதவுகின்றன. ஒரே, "கட்-ஆப்&' மதிப்பெண்களில், 350 பேர் வரை வருவர்.
இவர்களிடையே, கணித மதிப்பெண் யாருக்கு அதிகம் என, பார்க்கப்படும்.
இதில், அனைவரும் சமமாக இருந்தால், இயற்பியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண்
பார்க்கப்படும். இதுவும், சரி சமமாக இருந்தால், நான்காவது பாடத்தில் பெற்ற
மதிப்பெண்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இதுவும், ஒரே அளவு மதிப்பெண்களாக இருந்தால், மாணவர்களின் பிறந்த தேதி
பார்க்கப்படும். இதிலும், "டை" வந்தால், இறுதியில், ரேண்டம் எண்களில், அதிக
மதிப்புடைய எண்கள், யாரிடம் உள்ளதோ, அந்த மாணவர், முதலில் கலந்தாய்வுக்கு
அழைக்கப்படுவார். இவ்வாறு ரைமண்ட் தெரிவித்தார்.
மாணவர்கள், www.annauniv.edu என்ற இணையதளத்திற்குச் சென்று, விண்ணப்ப எண்களை பதிவு செய்தால், அவர்களுக்குரிய, ரேண்டம் எண்களை தெரிந்து கொள்ளலாம்.
பி.இ., படிப்பில் சேர, மொத்தம், ஒரு லட்சத்து, 89 ஆயிரத்து, 397
மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், மாணவர்கள் விண்ணப்பம், 60.67
சதவீதமாக உள்ளது. மாணவியரின், 39.33 சதவீதம் பேர் மட்டுமே,
விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள், ஒரு லட்சத்து, 14 ஆயிரத்து, 891 பேர்
விண்ணப்பித்துள்ளனர்.
மாணவியரில், வெறும், 74,506 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.கடந்த
ஆண்டிலும், மாணவியர், 73,742 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்; மாணவர்,
ஒரு லட்சத்து, 6,329 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு, மாணவர்
எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மாணவியர், எண்ணிக்கை, சிறிதளவு அதிகரித்துள்ளது.
முதல் தலைமுறை பட்டதாரிகளாக, ஒரு லட்சத்து, 3,636 மாணவர்கள்,
விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில், மாணவர்கள், 65, 374 பேரும், மாணவியர்,
38, 262 பேரும் அடங்குவர். கடந்த ஆண்டு, 86, 997 பேர், முதல் தலைமுறை
பட்டதாரிகளாக, விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு, ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது
குறிப்பிடத்தக்கது.
அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, கல்வி
கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து, தமிழக அரசு சலுகை அளிக்கிறது.
இதற்காக, ஆண்டுக்கு, 400 கோடி ரூபாய் வரை, அரசு செலவிடுகிறது.
கடந்த ஆண்டு, 2.48 லட்சம் மாணவர்களுக்கு (பாலிடெக்னிக் மாணவர்கள்
உள்பட), 478 கோடி ரூபாயை, தமிழக அரசு வழங்கியது. இந்த ஆண்டு, 500 கோடி
ரூபாய் வரை, நிதி உதவி வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment