நோக்கம் மற்றும் ஒரு இடத்தின் சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து,
முறையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திட்டமிடல்,
வடிவமைத்தல் மற்றும் கட்டடம் கட்டுதல் ஆகிய செயல்களை மேற்கொள்ளல்
ஆர்கிடெக்சர் எனப்படும்.
சிறப்பான வீடு மற்றும் பணியாற்றும் இடம் ஆகியவற்றை மக்கள் அதிகளவில் விரும்புவதால், இந்தத் துறையானது பெரியளவில் வளர்ந்து வருகிறது.
ஆர்கிடெக்சர் என்பது இன்றைய நிலையில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக
இருக்கிறது. இப்படிப்பில் சேரும் பல மாணவர்கள், இரண்டாம் செமஸ்டர்
காலத்திற்குள்ளேயே, அப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறி
விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் ஆர்கிடெக்சர் என்பதை வெறும்
கட்டடத்தை வடிவமைக்கும் பணி என்று நினைத்து விடுகிறார்கள். மேலும், பல
மாணவர்கள் நினைப்பது என்னவெனில், ஆர்கிடெக்சர் என்பது அதிகம் அறிவியல்
சம்பந்தப்பட்டதல்ல என்றும் அது பெருமளவில் கலைத்திறன் தொடர்பானது என்றும்
நினைக்கின்றனர்.
மாணவர்கள், இப்படிப்பில் சேர்ந்தவுடன், ஒவ்வொன்றையும் வடிவமைப்பு
மற்றும் கருத்துடன் இணைக்கும்போது, தாங்கள் எதிர்பார்த்ததைவிட,
வித்தியாசமாக உணர்கிறார்கள். கணிதத்திறன் உள்ள ஒவ்வொருவரும் இப்படிப்பை
தேர்ந்தெடுக்க தகுதி வாய்ந்தவர்களே. முதல் சில வருடங்கள், புத்தாக்க
முயற்சிக்கென்று அதிக நேரம் செலவழிக்க வேண்டாம். பொறியியல் படிப்புடன்
ஒப்பிடுகையில், இப்படிப்பின் தேர்வு நேரமானது அந்தளவு நெருக்கடியானதல்ல.
ஆனால், அதேநேரத்தில், இப்படிப்பில் பலவிதமான பணிகள் நிறைந்திருக்கும்.
இப்படிப்பின் நான்காம் ஆண்டில், ஒரு மாணவர் ஸ்பெஷலைசேஷனை
தேர்ந்தெடுக்கிறார். ஆர்கிடெக்சர் துறையைப் பொறுத்தவரை, ஸ்பெஷலைசேஷன்
என்பது பரவலானது.
Sustainable development, Contemporary, Interior designing,
Architectural photography உள்ளிட்ட பலவிதமான பிரிவுகளிலிருந்து ஒருவர்
தனது ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுக்கலாம். அதேசமயம், தவறான ஸ்பெஷலைசேஷனை
தேர்ந்தெடுத்தால், பெரிய சிக்கலில் மாட்ட நேரிடும். தற்போதைய நிலையில்,
Sustainable architecture எனப்படும் பசுமை கட்டடக்கலை பிரபலமாகி வருகிறது.
இப்படிப்பில், 5ம் ஆண்டான இறுதியாண்டில், ஆய்வறிக்கையின் வாயிலாக,
வடிவமைப்பு தொடர்பான முழு சுதந்திரம் மாணவர்களுக்கு கிடைக்கிறது. இந்த
நிலையில், ஒரு மாணவர், நிபுணத்துவம் பெற்ற ஆர்கிடெக்ட் என்ற நிலையை
அடைகிறார்.
பி.ஆர்க் முடித்தவுடன் என்ன செய்வது என்ற கேள்வி இருக்கும். இந்தப்
படிப்பானது, எம்.பி.பி.எஸ்., படிப்பை ஒத்ததாகும். ஏனெனில், பி.ஆர்க்.,
நிறைவுசெய்த பிறகு, ஒருவர் ஏதேனும் ஒரு ஸ்பெஷலைசேஷனில் முதுநிலை படிப்பை
மேற்கொள்ள வேண்டியிருக்கும். முதுநிலைப் படிப்பென்பது மிகவும் தனித்த
அம்சம் கொண்டது. பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் முதுநிலைப் படிப்பை
மேற்கொள்வதைவிட, இந்தியாவில் மேற்கொள்வது எளிது என்று சம்பந்தப்பட்டவர்கள்
கூறுகிறார்கள்.
பி.ஆர்க்., இளநிலைப் படிப்பை முடித்துவிட்டு பணிவாய்ப்பை தேடுவதைவிட,
முதுநிலைப் படிப்பிற்கு பிறகான பணிவாய்ப்புகளைப் பெறுவது எளிது. அதேசமயம்,
இந்தியாவிற்கு திரும்பிவர விரும்பினால், பி.ஆர்க்., மற்றும் எம்.ஆர்க்.,
படிப்புகளுக்கு இடையிலான சம்பளம் விகிதம் மிகவும் குறைவாகவே இருக்கும்.
சென்னையை எடுத்துக்கொண்டால், இங்கே கிடைக்கும் ஊதியம், பெங்களூர்,
அகமதாபாத் உள்ளிட்ட பிற நகரங்களைவிட நன்றாக இருக்கிறது என்று தொடர்புடைய
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவர் ஆர்கிடெக்சர் முடித்து, பணியில் சேர்ந்ததுமே, நல்ல ஊதியம்
பெறலாம் என்ற தவறான கருத்து ஒன்று உள்ளது. ஆனால், குறைந்தது 10 முதல் 15
வருடங்கள் அனுபவம் பெற்று, ஒரு நல்ல ஆர்கிடெக்டாக தன்னை
நிலைநிறுத்திக்கொள்ளும் ஒருவரே, சிறப்பான ஊதியம் பெறுகிறார். ஒரு சொந்தமாக
தொழில் தொடங்க நினைப்பது நல்லதே. அதேசமயம், சிறிதுகாலம் பிற இடங்களில்
பணியாற்றிவிட்டு, ஓரளவு அனுபவம் பெற்று, அதன்பிறகு சொந்த தொழிலில்
இறங்குவதே புத்திசாலித்தனம்.
ஆர்கிடெக்சர் துறையில் பயிற்சி செய்வதென்பது, மருத்துவ துறையில் பயிற்சி
செய்வதைப் போன்றதாகும். துறையில், நாள்தோறும் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி
தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேசமயம், அது வாழ்க்கை முழுவதற்குமான
கற்றல் செயல்பாடாகும். ஆர்கிடெக்ட் பணி என்பது, வெறுமனே கட்டட வரைபட
திட்டங்களை வரைவது மட்டுமேயல்ல, மாறாக, உங்களின் படைப்புத்திறனையும்,
ஆர்வத்தையும் வெளிப்படுத்துவதாகும். அப்போதுதான், இத்துறையில் நீடிக்க
முடியும்.
இத்துறையானது, அறிவியலும், வடிவமைப்பும் சேர்ந்த ஒன்றாகும். நீங்கள்
உருவாக்கும் வடிவமைப்பின் மூலமாக, உங்களது வாடிக்கையாளரை
திருப்திபடுத்துவது மிகவும் முக்கியம் மற்றும் நீங்கள் பல டிசைன்களை
உருவாக்க வேண்டியிருக்கும். மேலும், உங்களின் வடிவமைப்பு(design) முறையாக
பின்பற்றப்படுகிறதா என்பதை, சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று
மேற்பார்வையிடுவதும் முக்கியம்.
எனவே, ஆர்கிடெக்ட் பணி என்பது, சாதாரணமாக, காலையில் சென்று மாலையில்
வீடு திரும்பும் அலுவலக பணி போன்றதோ அல்லது பணம் சம்பாதிப்பதற்கான ஒரு எளிய
தொழிலோ அல்ல. இது ஒரு சந்தோஷமான, புத்தாக்கமான, படைப்புத்திறனுள்ள மற்றும்
உயர் பணிபொறுப்புள்ள பணியாகும்.
இத்துறையில் வெற்றியடைய வேண்டுமெனில், தீவிர அர்ப்பண உணர்வுடனும்,
போட்டிகளை ஜெயிக்கும் வகையிலான திறன்களை வளர்த்துக்கொள்ளும்
மனப்பாங்குடனும் விளங்க வேண்டும். அப்போதுதான், ஒரு வெற்றிகரமான
ஆர்கிடெக்டாக நீங்கள் பரிணமித்து, உங்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள
முடியும்.
No comments:
Post a Comment