தமிழ்நாடு அரசு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில், சமீபத்தில்
போடப்பட்ட அரசாணை, பொருளியல், கணிதவியல் படித்த, கிராமப்புற மாணவர்கள்,
பணியில் சேரும் வாய்ப்பை தடுப்பது, மாணவர்களிடம் கடும் அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசின் திட்டம், வளர்ச்சி
மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், பொருளியல்
மற்றும் புள்ளியியல் துறை உள்ளது. இத்துறை, 1944ல்
துவக்கப்பட்டது.விவசாயம், சமூகப் பொருளாதாரம், மாநில வருவாய், தொழிற்சாலை
கணக்கெடுப்பு, விலைப்புள்ளி விவரம் சேகரிப்பு ஆகியவை, முக்கியப்
பணிகளாகும்.
இத்துறை ஊழியர்கள், நேரடியாக களத்தில் இறங்கி, மக்களிடமும், பிற துறை
அலுவலர்களிடமும், புள்ளி விவரங்களை சேகரித்து, தொகுத்து,
அட்டவணைப்படுத்துவர். இதில், 75 சதவீதம், பொருளியல் பணி நடைபெறுகிறது;
அட்டவணைப் படுத்துதல் மட்டும் புள்ளியியல் பணி.
இத்துறையில், பொருளியல், கணிதம், புள்ளியியல் படித்தவர்கள், பணியில்
சேர்க்கப் பட்டனர். சமீப காலமாக, துறை உயர் அதிகாரிகள், புள்ளியியல்
படித்தவர்கள் மட்டும், துறை பணியில் சேர, நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
முன், புள்ளியியல் உதவி இயக்குனர், நேரடி நியமனத்திற்காக நடத்தப்படும்
தேர்வில், பொருளியல், கணிதவியல், புள்ளியியல் பாடப்பிரிவுகளில், முதுகலை
பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அவரவர் விருப்பப் பாடங்களை தேர்வு
செய்து, அந்தப் பாடத்திலேயே தேர்வு எழுதலாம்.
ஏதேனும் ஒரு துறையில், மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து, முதுகலை பட்டம்
பெற்றவர்களும், ஐந்து ஆண்டுகள் பணி புரிந்து, இளங்கலை பட்டம் பெற்றவர்களும்
பங்கேற்கலாம் என்ற நடைமுறை இருந்தது. இதன் மூலம், பிற துறை அலுவலர்கள்,
நேரடி நியமனம் மூலம், புள்ளியியல் உதவி இயக்குனர்களாக நியமிக்கப்பட்டனர்.
தற்போது, துறை அலுவலர்கள், எவரும் பங்கேற்க முடியாதவாறு, "உதவி
இயக்குனர் நேரடி நியமனம் முற்றிலும், "ஓப்பன் மார்க்கெட்' முறையில்
எடுக்கப்பட வேண்டும். முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பொருளியல், கணிதவியல், பொருளியல் படித்தவர்கள், தேர்வில் பங்கேற்றாலும்,
தேர்வு புள்ளியியல் பாடத்தில் மட்டும் நடத்தப்படும்&' என, அரசாணை
பிறப்பிக்கப்பட்டுள்ளது; அதன்படி தேர்வும் நடந்து முடிந்து
விட்டது.புள்ளியியல் உதவி ஆய்வாளர் தேர்வும், புள்ளியியல் பாடத்தில்
நடத்தப்பட்டதால், பொருளியல் மற்றும் கணிதவியல் படித்த, கிராமப்புற
மாணவர்கள், தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இப்புதிய அரசாணையை, திரும்பப் பெற வேண்டும் என, துறை ஊழியர்கள்
மற்றும் பொருளியல் மாணவர்கள், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர்கள் சங்கம், துறை
தலைமையிடச் செயலர், ஜூலியஸ் செல்வம் கூறியதாவது:
தமிழகத்தில், 10க்கும் குறைவான கல்லூரிகளில் தான், புள்ளியியல் முதுகலை
படிப்பு உள்ளது. ஆனால், பொருளியல் படிப்பு ஏராளமான கல்லூரிகளில் உள்ளது.
இதில் கிராமப்புற மாணவ, மாணவியர், அதிக அளவில் சேருகின்றனர்.அவர்கள் அரசு
பணியில் சேர, புள்ளியியல் துறை உதவியாக இருந்தது.
புதிய அரசாணையால், அவர்கள் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கிராமப்புற ஏழை மாணவர்கள் நலன் கருதி, பழைய முறைப்படி, மாணவர்கள்
விரும்பிய பாடத்தில் தேர்வு எழுத, அரசு அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்
தெரிவித்தார்.
புள்ளியியல் துறையில், புதிதாக தேர்வு செய்யப்படுவோருக்கு, பயிற்சி
அளிக்க, அரசு சார்பில், பயிற்சி நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. பயிற்சி
நிறுவனம் இல்லாத போது, பொருளியல், கணிதம் பாடத்தில் தேர்வு நடந்தது;
தேர்வானவர்களும் சிறப்பாக பணியாற்றினர்.
தற்போது, பயிற்சி நிறுவனம் துவக்கப்பட்ட பின், புள்ளியியல் பாடத்தில்
மட்டும் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு, கேலிக்குரியதாக உள்ளது என, துறை
ஊழியர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment