அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் குறைந்தது குறித்து, அதிகாரிகளிடம், கல்வி அமைச்சர் வைகைச் செல்வன், கேள்வி எழுப்பினார்.
மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்கள் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்,
சென்னையில், நேற்று நடந்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச் செல்வன்
தலைமையில் நடந்த கூட்டத்தில், துறை முதன்மை செயலர் சபிதா, பள்ளிக்கல்வி
இயக்குனர் தேவராஜன், தொடக்க கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மத்திய
இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவன், பள்ளிக்கல்வி இணை இயக்குனர்
கண்ணப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அமைச்சர் பேசுகையில், "வரும் கல்வி ஆண்டில், அனைத்து அரசுப் பள்ளிகளும்,
100 சதவீத தேர்ச்சியை பெற, ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் பாடுபட
வேண்டும். பள்ளிகளில், குடிநீர், கழிப்பறை வசதிகள் இருப்பதை, மாவட்ட
அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்" என, தெரிவித்தார்.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், விழுப்புரம்,
அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி
மாவட்டங்களில், ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் குறைந்திருப்பது குறித்தும்,
அதே நேரத்தில், இந்த மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம்
குறைவாக இருப்பது குறித்தும், அமைச்சர் கேள்வி எழுப்பியதாக, துறை
வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மாவட்டங்களில், வரும் கல்வி ஆண்டில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க
வேண்டும் என்றும், குறிப்பாக, அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை
அதிகரிக்க வேண்டும் எனவும், அமைச்சர் வலியுறுத்தியதாக, அதிகாரிகள்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment