அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில், அரசியல்
தலையீடு அதிகரித்து உள்ளதால், மாணவர் சேர்க்கையை, பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அரசு பள்ளிகளில் நடத்தப்படும்
விளையாட்டு விழா, கலை நிகழ்ச்சி, கட்டடம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து
செலவுகளுக்கும், மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் பொதுமக்களின் நன்கொடை
ஆகியவற்றின் மூலம், நிர்வாகம் செய்ய பெற்றோர் ஆசிரியர் கழகம்
உருவாக்கப்பட்டது.
ஆனால், தற்போது, அனைவருக்கும் கல்வி இயக்ககம், அனைவருக்கும்
இடைநிலைக்கல்வி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பின், பள்ளிகளுக்கான
பராமரிப்பு நிதி, அதிக அளவு ஒதுக்கப்படுகிறது. இதனால் மாணவர்களிடம்,
நன்கொடை, கல்விக்கட்டணம் உள்ளிட்டவை வசூல் செய்ய தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும், கட்சி பிரமுகர்கள் ஆதிக்கம் வகிக்கும், பெற்றோர் ஆசிரியர் கழக
நிர்வாகிகளை எதிர்த்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள், குரல் கொடுக்க
முடிவதில்லை. இதனால், மாணவர்களை பள்ளியில் சேர்க்க வரும் பெற்றோரிடம்,
கல்விக்கட்டணம், நன்கொடை என, கட்டாய வசூல் நடத்தப்படுகிறது.
குறிப்பாக, ஆங்கில வழிக்கல்வி உள்ள பள்ளிகளில், இந்த வசூல் வேட்டை
அதிகரித்துள்ளது. இதை, தலைமை ஆசிரியர்களால் தடுக்க முடியவில்லை.
இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, நன்கொடை மற்றும் கல்விக்கட்டணம்
வசூலிக்கக்கூடாது என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், பெற்றோர்
ஆசிரியர் கழகத்தில் உள்ளவர்களில், பெரும்பாலானோர் ஆளும்கட்சியை
சேர்ந்தவர்கள்.
மாணவர் சேர்க்கையை நாங்கள் தான் நடத்துவோம் என, கூறும் போது, அவர்களைத்
தடுக்க முடியவில்லை. தடுத்தாலும், எம்.எல்.ஏ., உள்ளிட்டோரிடமிருந்து போன்
வருகிறது. ஆங்கிலவழிக்கல்வி மற்றும் பிளஸ் 1 பாடத்தில், குறிப்பிட்ட
பிரிவுகளுக்கு, பல ஆயிரம் ரூபாய் நன்கொடையாக, வசூலிக்கின்றனர். இதனால்,
விரும்பிய பிரிவில் சேர்க்க, பெற்றோர் கடும் அவதிப்படுகின்றனர்.
எம்.எல்.ஏ., தலையீடு என, அதிகாரிகளுக்கு தெரிவித்தால், அவர்களும்
ஒதுங்கி விடுகின்றனர். ஆனால், பிரச்சனை என, வரும்போது, அவர்களும், தலைமை
ஆசிரியர்களையே பலிகடா ஆக்குகின்றனர். இதனால், அரசு பள்ளி தலைமை
ஆசிரியர்கள், இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர்.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தில், ஒன்றிரண்டு பெற்றோர் கூட இருப்பதில்லை.
முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் பதவியாக மாறிவிட்டது. அரசு பள்ளிகளில்,
பராமரிப்பு செலவுகளுக்கு, திட்ட நிதி மற்றும் அரசு வழங்கும் நிதியே,
போதுமானதாக இருப்பதால், பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தை கலைக்க
வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment