எஸ்.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அனுமதி
சீட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் படம் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு
ஏற்பட்டது.
ராஜஸ்தானின், தவுசா மாவட்டம்,
ராம்பாஸ் கிராமத்தை சேர்ந்தவர், லாலு ராம் மீனா, 40; தனியார் பள்ளி
ஆசிரியர். இவர், 1997ல் நடைபெற்ற, எஸ்.எஸ்.சி., தேர்வில் பங்கேற்று
தோல்வியுற்றார். அதன்பின், வயது வரம்பு தகுதி இல்லாததால், அரசுப்
பணிகளுக்கு விண்ணப்பிப்பதை நிறுத்திக் கொண்டார்.
இந்நிலையில், ஜூன், 9ம் தேதி, எஸ்.எஸ்.சி., சார்பில், துணைப் பொறியாளர்
பதவிக்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்பதற்கான நுழைவுச்
சீட்டு லாலுவின் முகவரிக்கு அனுப்பப்பட்டது. விண்ணப்பிக்காமலேயே,
எஸ்.எஸ்.சி.,யிலிருந்து தனக்கு நுழைவுச் சீட்டு வந்திருப்பதைக் கண்டு, அவர்
அதிர்ச்சி அடைந்தார்.
கடிதத்தை பிரித்து பார்த்ததும், மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். காரணம்,
அதில், லாலுவின் பெயர் மற்றும் முகவரி சரியாக இருந்தது; அவரின் படத்திற்கு
பதிலாக, அமெரிக்க அதிபர், பாரக் ஒபாமாவின் புகைப்படம் ஒட்டப் பட்டிருந்தது.
அதில், தேர்வாணைய அதிகாரியும் கையெழுத்திட்டிருந்தார். எம்.ஏ., -
பி.எட்., படித்த லாலுவுக்கு, தேர்வுக்கு விண்ணப்பிக்காமலேயே, பொறியாளர்
பதவிக்கான தேர்வு நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டதும், அதில், அதிபர்
ஒபாமாவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்ததும் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியது.
தேர்வு தேதி, தேர்வு நடைபெறும் இடம், நேரம் உள்ளிட்ட அனைத்து
விவரங்களும், அந்த அனுமதி சீட்டில் கொடுக்கப்பட்டிருந்தன.போலியான முறையில்
எவரேனும் நுழைவுச் சீட்டு அனுப்பியிருப்பார்களா என்ற சந்தேகத்தில், லாலு
இணையதளத்திலும் சரி பார்த்தார், அதிலும், ஒபாமாவின் படம்
இடம்பெற்றிருந்தது; பெயரும், "லாலு ராம் மீனா" என்றே இருந்தது.
அந்த நுழைவு கடிதத்தை, மத்திய தேர்வாணைய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள லாலு, விளக்கம் கேட்டுள்ளார்.
No comments:
Post a Comment