பள்ளிகள் திறந்த நிலையிலும், தனியார் பள்ளிகளுக்கு, கட்டணம்
நிர்ணயிக்கும் பணி முடியவில்லை. இதனால், நடப்பு கல்வியாண்டில், கட்டணம்
வசூலிப்பதில், பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான கட்டண நிர்ணய குழு, தனியார்
பள்ளிகளுக்கு, கட்டணங்களை நிர்ணயம் செய்து வருகிறது. ஏற்கனவே, கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டு, அதன் கால வரையறை காலாவதியான பள்ளிகளுக்கு, மீண்டும்,
மூன்று ஆண்டுகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்கும் பணியை, கட்டண நிர்ணய
குழு செய்து வருகிறது.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக, தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளை அழைத்து,
விசாரணை நடத்தி, புதிய கட்டணங்களை, குழு நிர்ணயித்து வருகிறது. இந்தப்
பணிகள், இன்னும் முடியவில்லை. கடந்த, 10ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டு
விட்டன. பெற்றோர், புதிய கட்டணங்களை செலுத்தி வருகின்றனர். அதே நேரத்தில்,
புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படாத பள்ளிகளில், கட்டணம் செலுத்துவதில்,
குழப்பம் நிலவி வருகிறது.
டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள கட்டண நிர்ணய குழு அலுவலகத்திற்கு, நேற்றும்,
500க்கும் மேற்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகள் வந்திருந்தனர். கோவை, தியாகி
என்.ஜி.ராமசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இணை செயலர் தேவராஜ்
கூறியதாவது:
எங்கள் பள்ளிக்கு, இந்த கல்வி ஆண்டுக்கு, இன்னும் கட்டணம்
நிர்ணயிக்கவில்லை. புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும் வரை, கடந்த ஆண்டு
கட்டணத்தை வசூலித்து வருகிறோம். புதிய கட்டணம் வந்ததும், அதற்கேற்ப,
கட்டணங்களை சரி செய்து கொள்வோம். எனினும், நடைமுறை ரீதியாக, சில பிரச்னைகள்
ஏற்படுகின்றன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
கட்டண நிர்ணய குழு, 2013-14, 2014-15, 2015-16 ஆகிய, மூன்று கல்வி
ஆண்டுகளுக்கு, புதிய கட்டணங்களை நிர்ணயித்து வருகிறது. பள்ளிக்கு ஏற்படும்
அனைத்து வகை செலவினங்களையும், குழு, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாமல்,
குறிப்பிட்ட செலவினங்களின் அடிப்படையில், கட்டணத்தை நிர்ணயிப்பதாக,
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச் செயலர்
நந்தகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: பெற்றோருக்கும் பாதிப்பு ஏற்படாமல், பள்ளியை
நடத்துபவர்களுக்கும், பாதிப்பு ஏற்படாத வகையில், கட்டணங்களை நிர்ணயிக்க
வேண்டும். போக்குவரத்து கட்டணமாக, தினசரி, கிலோ மீட்டருக்கு, 10 ரூபாய்
வசூலித்துக் கொள்ளலாம் என, குழு கூறுகிறது.
10.கி.மீ., தூரம் வந்து செல்லும் குழந்தைகளிடம், மாதம், 6,000 ரூபாய்
வசூலிக்க முடியுமா? அப்படி, நாங்கள் வசூலிப்பதில்லை. பல்வேறு
குளறுபடிகளுடன், கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இவ்வாறு, அவர்
கூறினார்.
No comments:
Post a Comment