மாநிலம் முழுவதும், பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கை, நேற்று துவங்கியது. 8
லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், அதிக மதிப்பெண்களை குவித்ததால்,
அனைத்து மாணவர்களும், இன்ஜினியர், மருத்துவம் சார்ந்த குரூப்களை கேட்டு,
நச்சரிப்பதால், தலைமை ஆசிரியர்கள், திண்டாடி வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு,
கடந்த, 31ம் தேதி வெளியானது. இந்த ஆண்டு, தேர்வெழுதிய, 10.51 லட்சம்
பேரில், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், 60 சதவீதம் முதல், 95
சதவீதம் வரை, மதிப்பெண்களை, வாரி குவித்துவிட்டனர். இந்த மாணவர்கள்
அனைவரும், இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளின் மீது கண் வைத்துள்ளனர்.
மூன்றாவதாக, காமர்ஸ் குரூப் உள்ளது. மாநிலம் முழுவதும், பள்ளிகளில்,
நேற்று, பிளஸ் 1 சேர்க்கை துவங்கியது. மாணவர்கள் அனைவரும், பள்ளிகளை
முற்றுகையிட்டு, முதல் இரண்டு, குரூப்களை கேட்டனர். ஒவ்வொரு பிரிவிலும், 40
மாணவர்கள் மட்டுமே சேர்க்க, அரசு, அனுமதித்துள்ளது.
ஆனால், அதிகமான மாணவர்கள், இன்ஜினியரிங் குரூப்பையும், மருத்துவ
படிப்பிற்கான குரூப்பையும் கேட்பதால், இடம் வழங்க முடியாமல், தலைமை
ஆசிரியர்கள், திண்டாடி வருகின்றனர்.
சென்னையில், நேற்று, அனைத்துப் பள்ளிகளிலும், மாணவர் கூட்டம் அலை
மோதியது. சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில், ஏராளமான மாணவ, மாணவியர்,
பெற்றோருடன் குவிந்தனர்.
இது குறித்து, அரசு பள்ளி வட்டாரங்கள் கூறியதாவது: பெரிய அரசு
பள்ளிகளில் மட்டும், ஒரு பாடத்திற்கு, இரண்டு முதல் மூன்று ஆசிரியர்கள் வரை
உள்ளனர். பெரும்பாலான பள்ளிகளில், ஒரு பாடத்திற்கு, ஒரு ஆசிரியர் என்ற
நிலை தான் உள்ளது. ஒரு வகுப்பில், 40 முதல், 50 மாணவர் வரை சேர்க்கலாம்.
இதைவிட, கூடுதலாக சேர்த்தால், மாணவர்களுக்கு, சரிவர, பாடம் கற்பிக்க
முடியாது.
ஆனாலும், அதிகமான மாணவர்கள், இயற்பியல், வேதியியல், கணிதம்,
கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பையே கேட்கின்றனர். இதற்கு அடுத்து, மருத்துவம்
மற்றும் இன்ஜினியரிங் ஆகிய இரு குரூப்பும் கொண்ட ஆகும் பாடப் பிரிவை
கேட்கின்றனர். பியூர் சயின்ஸ் குரூப்பை, அதிகமான மாணவர்கள் கேட்பதில்லை.
காமர்ஸ் பிரிவுக்கு, அதிக வரவேற்பு உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கே, கேட்கும் பாடப்பிரிவை வழங்க முடியாத நிலையில்,
வெளியில் இருந்தும், சீட் கேட்டு, அதிக மாணவர்கள் வருகின்றனர்.
அவர்களுக்கு, எப்படி சீட் வழங்க முடியும்? பள்ளிகளின் தன்மைக்கு ஏற்ப,
கூடுதல் ஆசிரியர்களை நியமித்தால், கூடுதல் பாடப்பிரிவுகளை துவங்கி, சீட்
வழங்க முடியும். இவ்வாறு, அரசு பள்ளி வட்டாரங்கள் தெரிவித்தன.
தனியார் பள்ளிகளில், சீட் வாங்குவது, குதிரைக் கொம்பாக உள்ளது.
பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு போக, மீதம் உள்ள ஒன்றிரண்டு இடங்களை
வாங்குவதற்கு, வி.ஐ.பி.,க்களின் சிபாரிசு கடிதங்களுடன், பள்ளிகளை, பெற்றோர்
முற்றுகையிட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment