போக்குவரத்து துறை ஆய்வில், 3,084 பள்ளிகளில், போக்குவரத்து குழுக்கள்
அமைக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆறு நாட்களுக்குள் போக்குவரத்து
குழுக்களை அமைக்க வேண்டும் என, போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
வரும், ஜூன், 10ம் தேதி பள்ளிகள்
திறக்கப்படுகின்றன. இதையடுத்து, பள்ளி வாகனங்கள், விதிமுறைகளை முறையாக
பின்பற்றப்படுவது குறித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கண்காணிப்பை
தீவிரப்படுத்த போக்குவரத்து துறை திட்டமிட்டது.
தமிழகத்தில் உள்ள, 11 போக்குவரத்து துறை மண்டலங்களில், மண்டலத்திற்கு
தலா, நான்கு முதல், ஐந்து சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஆர்.டி.ஓ., தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், இருவர் உட்பட, மூன்று
பேர் கொண்ட குழுக்கள், பள்ளி வாகனங்களின் நிலை குறித்த சோதனையில் ஈடுபட்டு
வருகின்றனர்.
கடந்த மாதம், 24ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனையில், தகுதி
சான்றிதழ் தருவதற்கு தகுதியில்லாதவை என, 162 வாகனங்கள் கண்டறியப்பட்டன.
இந்த பணி நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்து குழுக்கள் அமைக்காத
பள்ளிகளின் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிகளில் போக்குவரத்து குழுவை பொறுத்தவரை, தலைமை ஆசிரியர் தலைமையில்,
சப்-இன்ஸ்பெக்டர், கல்வித் துறை அதிகாரி, மோட்டர் வாகன ஆய்வாளர், பெற்றோர் -
ஆசிரியர் சங்க பிரதிநிதி ஆகியோர் இடம் பெற வேண்டும்.
பள்ளிகளில் இந்த குழுக்கள்,விபத்துகளை தவிர்க்கும் வகையில், வாகனங்களின்
பாதுகாப்பு நிலை குறித்த ஆய்வு, ஓட்டுநரின் நிலை உள்ளிட்ட விஷயங்களில்
கவனம் செலுத்தி, ஆலோசனை கூட்டத்தை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில், 5,660 பள்ளிகளில் போக்குவரத்து குழுக்கள் அமைக்கப்பட
வேண்டும். இதில், 2,576 பள்ளிகளில் மட்டுமே, போக்குவரத்து குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, 3,084 பள்ளிகளில் போக்குவரத்து குழுக்களை
அமைக்காதது, போக்குவரத்து துறை ஆய்வு பணியில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாகனங்களை
முறையாக இயக்குவதற்கு, பள்ளி அளவிலான போக்குவரத்து குழு அமைக்கப்பட
வேண்டும். வரும், 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்குள்
போக்குவரத்து குழுவை அமைப்பதுடன், முதல் ஆலோசனை கூட்டத்தையும்
நடத்தியிருக்க வேண்டும்.
இதற்கான பணியில், பள்ளிகளின் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டியது
அவசியம். போக்குவரத்து குழு அமைக்காத பள்ளிகளில், வாகன இயக்கத்திற்கு தடை
செய்வதோடு, பள்ளியின் மீது, அத்துறையின் இயக்குனரகம் சார்பில் நடவடிக்கை
எடுப்பதற்கான, உறுதியான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்
கூறினார்.
பள்ளி பஸ், வேன்களுக்கு பர்மிட் வழங்காமல் இருப்பதால், பள்ளி திறந்த
பின், பஸ்கள் இயங்குமா கேள்விக்குறியாகியுள்ளது. பள்ளிகளுக்கு இயக்கப்படும்
பள்ளி வாகனங்களுக்கும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, எப்.சி எனப்படும்
தகுதி சான்றிதழ் பெறுவது அவசியம்.
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், எப்.சி., பெற பள்ளிக்கான அங்கீகார கடிதம்
முக்கிய ஆவணமாக கேட்கப்படுகிறது. அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பஸ்கள்,
எப்.சி., பெற முடியாத நிலை உள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி
வாகனங்கள் எப்.சி., பெறாமல் உள்ளன.
ஜூன், 10ம் தேதி பள்ளி திறக்கும் நிலையில், எப்.சி., பெறாத பள்ளி
வாகனங்களை இயக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தனியார் பள்ளி வாகனங்கள்
இயக்குவதை நிறுத்தினால், ஆட்டோக்களை மட்டுமே நம்பும் நிலை பெற்றோருக்கு
ஏற்படும். பஸ் வசதியை பள்ளிகள் நிறுத்திக்கொள்ளும் பட்சத்தில், பள்ளி
மாணவர்களுக்கான பாதுகாப்பான பயணம் கேள்விக்குறிதான்.
No comments:
Post a Comment