அனைத்து வசதிகளும் உள்ள பள்ளி மாணவர்களால் மட்டும்தான்
சாதிக்க முடியுமா என்ன...? எந்த சப்தத்தையும் கேட்காமலே, எந்த
வார்த்தையையும் உச்சரிக்காமலே எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை
நிரூபித்துள்ளனர் கோவை மாநகராட்சி காது கேளாதோர் பள்ளி மாணவர்கள்.
கோவை ஆர்.எஸ்.புரத்திலுள்ள மாநகராட்சி காது கேளாதோர்
சிறப்பு பள்ளி மாணவர்கள், 8 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
திருச்சியை சேர்ந்த மாணவன் தினேஷ் 279 மதிப்பெண்ணும்,
திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டிசெல்வம் 204 மதிப்பெண்ணும், உடுமலையை சேர்ந்த
சரவணக்குமார் 169 மதிப்பெண்ணும் பெற்று முதல் மூன்று இடங்களை
பிடித்துள்ளனர்.
தேர்வு எழுதிய, கோவையை சேர்ந்த மனோஜ்- 150, தமிழரசன்- 154,
பொள்ளாச்சியை சேர்ந்த மாரிமுத்து- 167, உடுமலையை சேர்ந்த ரவிக்குமார்- 152,
நடராஜ்- 155 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி கூறுகையில்,
"காது கேட்காததால், இவர்களால் வாய் பேச முடிவதில்லை. பிறவி ஊனமான
இவர்களுக்காக கோவை மாநகராட்சி சார்பில் 1932ல் சிறப்பு பள்ளி
துவங்கப்பட்டது. கடந்த 2002ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
கடந்த 2009-2010 பொதுத்தேர்விலும், இந்தாண்டும் பள்ளி
"சென்டம்" அடித்துள்ளது, மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க, ஆசிரியர்களும்
சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர். சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு அரசு சிறப்பு
சலுகை வழங்கியுள்ளது.
ஆங்கில மீடியம் மாணவர்கள் தமிழ் படிக்க தேவையில்லை; தமிழ்
மொழியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம் படிக்க தேவையில்லை. அதனால், ஒரு
மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு மட்டும் தேர்வு
நடக்கும்.
வழக்கமான அரசு பாடத்திட்டத்தில், உரையாடல் முறையில் கல்வி
கற்பிக்கப்பட்டது. மாணவர்களின் புரிதல் தன்மைக்கு ஏற்ப பாடத்திட்டம் நிறைவு
செய்யப்பட்டது. உதடு அசைவு, சைகை முறையை புரிந்து மாணவர்கள்
படிக்கின்றனர். இவர்களுக்கு கற்பிப்பதையும், பெற்ற வெற்றியையும் எவருடனும்
ஒப்பிட முடியாது," என்றார்.
No comments:
Post a Comment