சென்னை அருகே குன்றத்தூரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் தலைவர் ஸ்ரீராம் தினமலருக்கு அளித்த பேட்டி:
"பொறியியல் என்பது பலருடைய கனவாக
இருந்த நிலை மாறி, வேறு துறைகளின் பக்கம் மாணவர்களின் கவனம் செல்வதற்கு
முக்கிய காரணம் கல்லூரிகள்தான். பல கல்லூரிகள் வெறும் பாடத்தை மட்டுமே
சொல்லித்தருகின்றன. இதன் காரணமாக படித்து வெளியே வரும் மாணவன் வேலைக்கு
தயாரானவனாக வருவதில்லை.
நிறுவனங்களில் நேர்முகத்தேர்வுக்கு செல்லும்பொழுதோ அல்லது வேலைக்கு
செல்லும் பொழுதோ புதிய சூழ்நிலையைக் கண்டு திணறி விடுகின்றனர். அதுபோன்று
படிக்கும் பலருக்கும் படித்து முடித்தவுடன் அடுத்து எந்த மாதிரி வேலைக்கு
செல்வது, மேல்படிப்பு என்ன படிக்கலாம்? அதற்கு எப்படி தயாராவது? போன்ற
தெளிவு இல்லாமலேயே நான்கு வருடத்தை கடந்து விடுகின்றனர்.
மாணவன் தெளிவாக இருந்தாலும் ஆசிரியர்கள் போதிய அறிவும் ஆற்றலும்
இல்லாதவர்களாக இருந்தால் மாணவனின் எதிர்காலம் கேள்விக்குறியதாகி விடுகிறது.
கல்லூரியின் நிர்வாகம் பண நோக்கத்தோடு மட்டுமே செயல்பட்டால் படிக்கும்
மாணவன் நம்பிக்கையை இழந்துவிடுகிறான். இதுபோன்ற குறைகளை களைந்தால் தான்
பொறியியல் மாணவன் பட்டத்துடன் வேலைக்கு தயாரான திறமை மிகுந்தவனாக வெளியேற
முடியும்.
மருத்துவ மாணவன், தான் படிக்கும் காலத்தில் பாடத்தை மட்டுமே
படிப்பதில்லை. செயல்முறை அறிவையும், அனுபவத்தையும் பெறுகிறான். ஆனால்
இயந்திரங்களோடு வேலை பார்க்கக்கூடிய பொறியியல் மாணவன் இயந்திரத்தின் தன்மை
தெரியாமலேயே தன் படிப்பு காலத்தை முடித்துவிடுகிறான். இது எப்படி
சரியாகும்? இயந்திரங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பற்றிய அறிவு
முன்னதாகவே கிடைத்தால்தான் அந்த மாணவனால் சிறப்பாக செயலாற்ற முடியும்.
இந்த அடிப்படையை உணர்ந்து கொண்டதால்தான் நாங்கள் மாணவர்களின்
விருப்பங்களுக்கு ஏற்றவாறு எதிர்காலத்தை உருவாக்குவதற்கு துணைபுரிகிறோம்.
மாணவர்கள் தங்களை நிதானப்படுத்திக்கொள்ள போதுமான விடுமுறைகள் இருத்தல்
வேன்டும். பாடத்தை தவிர விளையாட்டு, இசை போன்றவற்றிலும் அவர்களின் ஆர்வத்தை
ஊக்குவிக்க வேண்டும். மென் திறன்களை வளர்த்துக்கொள்ள முக்கியத்துவம்
அளிக்க வேண்டும்.
தொழில் நிறுவனத் தேவைகளை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் தொழில்
நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய நபர்களைக் கொண்டு அவர்களுக்கு என்ன தேவை?
எப்படி பணியாற்றுகிறார்கள் என்ற அனுபவத்தை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க
வேண்டும். அவர்களின் வழிகாட்டுதல் புத்தகத்தில் நிச்சயம் இருக்காது. ஆனால்
வேலைக்கு செல்லும்பொழுது அதுதான் துணைபுரியும்.
மாணவன் எந்த துறையில் வேலை பார்க்க விரும்புகிறான், அல்லது மேல்படிப்பு
படிக்க விரும்புகிறானா என்பதை அறிந்து கொண்டு அவர்களுக்கேற்ற பயிற்சியை
முதல் ஆண்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். நாங்கள் எங்கள் மாணவர்களுக்கு
முதல் ஆண்டில் என்ன துறையை தேர்ந்தெடுக்கலாம் என்ற தெளிவையும், 2ம் ஆண்டில்
தொழில்நுட்பம் சார்ந்த அறிவை வளர்ப்பதற்கும், 3ம் ஆண்டில் நேரடி கள
அனுபவத்தையும், 4ம் ஆண்டில் பணி அனுபவத்தையும் வழங்குகிறோம். இளநிலைப்
பட்டப்படிப்பிலேயே ஆராய்ச்சி ஈடுபாட்டை மாணவர்களிடம் ஊக்குவிக்கிறோம்.
மேல்படிப்பை தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்களுக்கு GATE போன்ற
தேர்வுகளுக்கான பயிற்சியையும், டோபல் போன்ற மொழித்திறனை வளர்ப்பதற்கான
வாய்ப்பையும் வழங்குகிறோம். படிக்கும் மாணவர்களில் 10 சதவிகிதம் பேராவது
சுய தொழில் முனைவோராக வர வேண்டும் என விரும்புகிறோம்.
இது போன்ற திட்டமிட்ட கல்வியின் மூலம் படிப்பை முடிக்கும் மாணவன்
தெளிவான மனநிலையோடு, தனது எதிர்காலம் இதுதான் என்ற உறுதியான திட்டத்தோடு
வெளியேறுகிறான். இந்த தன்னம்பிக்கைதான் நாட்டின் எதிர்காலத்திற்கும் தேவை"
என்றார்.
No comments:
Post a Comment