தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று அனைத்துப் பள்ளிகளும்
திறக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர்களில், பள்ளி வேன் கட்டணம்,
தூரத்திற்கு தகுந்தாற்போல், 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை
உயர்த்தப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்குப் பின்,
பள்ளிகள், நேற்று திறக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி
மாணவர்களுக்கு, நேற்றே, இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. புத்தகப்
பைகளும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
பெரும்பாலான தனியார் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், பாதி
வேளையுடன் விடப்பட்டன. இன்று முதல், வழக்கம் போல் இயங்கும் என,
மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர்களில், பள்ளி வேன் கட்டணம், 100
ரூபாய் முதல், 200 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. கிண்டி, பரங்கிமலை
பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக, தனியார் வேன்கள், அதிகளவில்
இயக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில், வேன் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பரங்கிமலையில் உள்ள பள்ளிகளுக்காக, மாங்காடு, கொளப்பாக்கம்,
நங்கநல்லூர், ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வேன்கள்
இயக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கான வேன்
கட்டணம், கடந்த ஆண்டை விட, 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை, கூடுதலாக
உயர்த்தி உள்ளனர்.
வேன் உரிமையாளர் ஜெயராமன் கூறுகையில், "கடந்த ஆண்டு, நங்கநல்லூர் போன்ற
பகுதிகளில் இருந்து வர, ஒரு மாணவருக்கு, 800 ரூபாய் வசூலித்தோம். தற்போது,
900 ரூபாயாக உயர்த்தி உள்ளோம்.
இதேபோல், தூரத்திற்கு தகுந்தாற்போல், சிறிதளவு கட்டணம்
உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அதிகாரிகள் கெடுபிடி, அதிகமாக
உள்ளது. இதற்குப் பயந்து, வேன்களை இயக்கவே, உரிமையாளர்கள் பயப்படுகின்றனர்"
என தெரிவித்தார்.
இதற்கிடையே, அங்கீகாரம் ரத்தான நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன்
பள்ளிகளின் நிர்வாகிகள், நேற்று, டி.பி.ஐ., வளாகத்தில், கல்வித்துறை
அதிகாரிகளை சந்தித்து, அங்கீகாரம் வழங்க வலியுறுத்தினர். அதற்கு, "இது,
அரசு எடுத்த நடவடிக்கை; இதில், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது" என,
அதிகாரிகள் தெரிவித்ததாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment