ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு
ஆதரவு தெரிவித்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல், பெற்றோர்
புறக்கணித்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த, கடப்பமடை பகுதியில் செயல்படும் யூனியன் தொடக்கப்பள்ளியில், 28 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த, 2002ம் ஆண்டு முதல், இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக கந்தசாமி செயல்பட்டு வந்தார். சில வாரத்துக்கு முன், நசியனூர் கந்தாம்பாளையம் பள்ளிக்கு, இவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகளை, பள்ளிக்கு அனுப்பாமல், பெற்றோர்கள் புறக்கணித்தனர். புதிதாக பொறுப்பேற்ற தினத்தில், மாணவ, மாணவிகள் யாரும் வராததால், தலைமை ஆசிரியை கீதா அதிர்ச்சி அடைந்தார்.
அப்பகுதி மக்களிடம் சென்று மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்புமாறு, தலைமை ஆசிரியை கீதா வேண்டுகோள் விடுத்தார். ஆனால், முன்பு இருந்த, அதே தலைமை ஆசிரியரை நியமித்தால் தான், பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புவோம், என பெற்றோர் போர்க்கொடி தூக்கினர்.
தகவல் அறிந்ததும், விரைந்து வந்த பெருந்துறை டி.எஸ்.பி., குணசேகரன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ""நாங்கள் வருவாய்த்துறை அமைச்சரிடம், முன்பு இருந்த தலைமை ஆசிரியரையே நியமிக்க வேண்டும், என வேண்டுகோள் விடுத்துள்ளோம். மீண்டும் தலைமை ஆசிரியராக கந்தசாமி நியமிக்கும் வரை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராக இல்லை,'' என, தெரிவித்தனர்.
ஆவேசமடைந்த டி.எஸ்பி., குணசேகரன், ""அரசுப்பணி என்பது யாருக்கும் நிரந்தரமில்லை. நீங்கள் முறையிட்டவர், வருவாய்த்துறை அமைச்சர். அவர் கல்வித்துறை அமைச்சர் இல்லை. அமைச்சர்களும், அதிகாரிகளும், இன்று இருப்பார்கள், நாளை அவர்களது பதவி இருக்குமா, எங்கு மாற்றப்படுவார்கள், என தெரியாது,'' என, சமாளித்தார்.
எனும், டி.எஸ்.பி.,யின் பேச்சுக்கு உடன்படாத பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். டி.எஸ்.பி., உத்தரவுப்படி, வீடு, வீடாக சென்று, மாணவ, மாணவிகளை போலீஸார் தேடினர். ஆனால், ஒரு மாணவர் கூட, போலீஸாரின் கண்ணில் சிக்காததால், அரசுக்கும், கல்வித்துறைக்கும் மனு அனுப்புங்கள், என கூறிவிட்டு, டி.எஸ்.பி., சென்றார்.
No comments:
Post a Comment