ஸ்ரீரங்கத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நடந்து வரும் தேசிய
சட்டப் பள்ளிக்கான கட்டுமான பணிகளை, இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க,
முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், அங்கு கட்டுமானப் பணிகள், விரைவாக
நடந்து வருகின்றன.
தமிழகத்தில், சட்டக்
கல்விக்கென்று, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்,
சென்னையில் இயங்கி வருகிறது. இந்த சட்டப் பல்கலைக் கழகத்துடன், ஏழு அரசு
சட்டக் கல்லூரிகளும், ஒரு தனியார் சட்டக் கல்லூரியும் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த சட்டப் பல்கலைக்கு உட்பட்ட, சீர்மிகு சட்டப் பள்ளியையும்
(ஸ்கூல் ஆப் எக்செலன்ஸ்) 2002ல் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
இந்நிலையில், சட்டக்கல்வி தரத்தை, சர்வதேச சட்டப் பள்ளிகளுக்கு இணையாக
உருவாக்கும் வகையில், தமிழகத்தில் தேசிய அளவிலான, சட்டப்பள்ளி
துவங்கப்படும் என, கடந்தாண்டு, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதற்காக, ஸ்ரீரங்கம் தொகுதியில் சட்டப் பள்ளி அமைக்க முடிவு
செய்யப்பட்டது. அதன்படி, ஸ்ரீரங்கம் தாலுகாவுக்கு உட்பட்ட, நவலூர்
குட்டப்பட்டில் உள்ள வேளாண் கல்லூரிக்குச் சொந்தமான, 25 ஏக்கரில், 100 கோடி
ரூபாய் செலவில், சட்டப் பள்ளி அமைக்க, முதல்வர், கடந்தாண்டு அடிக்கல்
நாட்டினார்.
அதற்கான கட்டுமானப் பணிகள், விரைவாக நடந்து வருகின்றன. இந்நிலையில்,
இந்தாண்டு இறுதிக்குள், கட்டுமானப் பணியை முடிக்க வேண்டும் என, முதல்வர்
உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, திருச்சி மண்டல பொதுப் பணித் துறை கட்டட பிரிவு, உயர்
அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதல்வர் உத்தரவிட்டுள்ளதால், இந்தாண்டு
இறுதிக்குள், கட்டுமானப் பணியை முடித்து விடுவோம். முதல்வர் திறந்து வைத்த
பிறகு, அலங்கரிக்கும் வேலைகள் நடக்கும். அதன் பிறகு, அடுத்த கல்வியாண்டு
முதல், சட்டப் பள்ளி செயல்படத் துவங்கும்" என்றார்.
No comments:
Post a Comment