தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையினர் மேற்கொண்ட ஆய்வில், 679 பள்ளி
வாகனங்கள், தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு தகுதியற்றவை, என,
கண்டறியப்பட்டுள்ளது. நாளை மறுநாள், பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில்,
பள்ளி வாகனங்களின் ஆய்வு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
வரும், ஜூன் 10ம் தேதி, பள்ளிகள்
திறக்கப்படுகின்றன. இதையடுத்து, பள்ளி வாகனங்கள், விதிமுறைகளை முறையாக
பின்பற்றப்படுவது குறித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கண்காணிப்பை
போக்குவரத்து துறை தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும், கடந்த மாதம், 24ம் தேதி முதல், 11 சிறப்பு
கண்காணிப்பு குழுக்கள், ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது. பள்ளி
வாகனங்களில் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து,
அவற்றிற்கு தகுதி சான்றிதழை அளித்து வருகின்றனர். மேலும், பள்ளிகளில்
போக்குவரத்து குழுக்கள் அமைக்கப்பட்டது குறித்த, ஆய்வு பணியையும்
மேற்கொண்டு வருகின்றனர். இதில், 3,084 பள்ளிகளில் போக்குவரத்து குழுக்கள்
அமைக்கப்படவில்லை என கண்டறியப்பட்டது.
தொடர்ந்து, பள்ளி வாகனங்களை சோதனை செய்து, தகுதி சான்றிதழ் வழங்கும் பணி
நடைபெற்று வருகிறது. கடந்த வாரம், முதல் கட்டமாக, 162 பள்ளி வாகனங்கள்
தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு தகுதியற்றவை என கண்டறிந்தனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வு பணியில், தகுதி சான்றிதழ்
வழங்குவதற்கு தகுதியற்ற வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதில், கடந்த,
15 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில், 2,873 பள்ளி வாகனங்கள் ஆய்வு
செய்யப்பட்டு, அவற்றில் 2,194 வாகனங்களுக்கு, தகுதி சான்றிதழ்
வழங்கப்பட்டுள்ளன.
மேலும், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறைபாடு உள்ள, 679 வாகனங்கள்
தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு தகுதியில்லாதவை என கண்டறிந்துள்ளோம். பள்ளி
வாகன விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கும் படியும், போக்குவரத்து குழுக்கள்
அமைப்பதன் நன்மை குறித்தும், பள்ளிகளுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment