கடலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம்
வெகுவாக குறைந்து வருகிறது. அதிலும் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில்
தேர்ச்சி சதவிகிதம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 210 அரசு உயர்நிலைபள்ளிகளும், 11 ஆதி
திராவிடர் நலப்பள்ளிகளும், ஒரு சமூக நலப்பள்ளியும் மொத்தம் 222 பள்ளிகள்
செயல்பட்டு வருகின்றன. 168க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகள்
உள்ளன.
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலூர்
மாவட்டத்தில் 75 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த
ஆண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 81 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு
தேர்ச்சி சதவீதத்தோடு ஒப்பிடுகையில் 6 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.
அதேபோன்று பிளஸ் 2 தேர்வில் கூட கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு
9 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. அதிலும் கடலூர் கல்வி மாவட்டத்தை விட
விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் மேலும் 4 சதவீதம்
குறைந்துள்ளது.
அரசு பள்ளிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு
செய்து கொடுத்துள்ளது. தனியார் பள்ளிகளில் பணியாற்றிய அனுபவம் மற்றும்
திறமை வாய்ந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை நியமித்துள்ளது. அத்துடன் மற்ற
அரசு அலுவலக ஊழியர்கள், அதிகாரிகளைப்போல் அல்லாமல் அவர்கள் பணியாற்ற
விரும்பும் பள்ளிகளுக்கு கவுன்சிலிங் முறையில் பணியமர்த்துகிறது. மாணவர்கள்
எண்ணிக்கைக்கு தக்கவாறு ஒரிரு பள்ளிகளைத் தவிர ஆசிரியர் பணியிடங்களை
பூர்த்தி செய்துள்ளது.
இவ்வளவு வசதிகளையும் பெற்றுள்ள அரசு பள்ளியை சேர்ந்த
மாணவர்கள் தேர்ச்சி சதவீதத்தில் கனிசமாக குறைந்து வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள ஓரிரு பள்ளிகளைத் தவிர பெரும்பாலான தனியார் பள்ளிகள்
குறைந்த பட்சம் 90 சதவீதம் தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளன.
ஆனால் அரசு பள்ளிகளில் மட்டும் ஆண்டுதோறும் தேர்ச்சி
சதவீதம் குறைந்து வருவது எதனால் என்பது புரியவில்லை. மாவட்டத்திலேயே அதிக
மாணவர்களை தேர்வுக்கு அனுப்பிய மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளி 945
மாணவர்களுக்கு 855 பேர் தேர்ச்சி பெற்று 90 சதவீதத்தை பெற்றுள்ளது.
கடலூர் செயின்ட் ஆன்ஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு
எழுதிய 914 மாணவிகளில் 913 பேர் தேர்ச்சி பெற்று 99 சதவீதம் தேர்ச்சி
பெற்றுள்ளனர். அதேப்போல நெய்வேலியை சேர்ந்த ஜவகர் பள்ளியில் தேர்வு எழுதிய
591 மாணவ மாணவிகளில் 581 பேர் தேர்ச்சி பெற்று 98 சதவீதத்தை எட்டியுள்ளனர்.
அதிக எண்ணிக்கையில் மாணவர்களை கொண்ட பள்ளிகள் சிறந்த
தேர்ச்சி சதவீதத்தை அடையும்போது குறைந்த அளவிலான மாணவர்களை கொண்ட அரசு
பள்ளிகள் மிக குறைந்த அளவு தேர்ச்சி மட்டுமே எட்ட முடிகிறது என்பதற்கு
காரணம் புரியவில்லை.
ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை எஸ்.எம்.எஸ்., மூலம்
அனுப்பும் திட்டத்தை முதன்முதலாக அரங்கேற்றி தமிழகத்திற்கே முன்னோடியான
மாவட்டமாக திகழ்ந்த கடலூர் மாவட்ட மாணவர்கள் தேர்ச்சி சதவீதத்தில் மட்டும்
தமிழகத்திலேயே கடைசி மாவட்டமாக தள்ளப்பட்டுள்ளது எதனால் என்பதை கண்டறிந்து
நிவர்த்தி செய்திட வேண்டும்.
No comments:
Post a Comment