"ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில், ஆங்கில
திறன் அறியும் தேர்வு அவசியம் என்ற, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின்
முடிவை, ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும்" என மத்திய
அரசுக்கு, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டில்லியை சேர்ந்த, தினாத் பத்ரா
என்பவர், அம்மாநில ஐகோர்ட்டில், இந்த விவகாரம் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல்
செய்தார். அதில், "சிவில் சர்வீஸ் தேர்வுகளில், ஆங்கிலத் திறன் அறியும்
தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளதால், இந்தி மற்றும் இதர மாநில மொழிகளை பேசும்,
மாணவ மாணவியர் மிகக்கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்" என
குறிப்பிட்டிருந்தார்.
மனுதாரரின் வழக்கறிஞர்கள், ஜெகதீப் தன்காத் மற்றும் மோனிகா அரோரா
ஆகியோர் கூறியதாவது: சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு,
2010ம் ஆண்டுக்கு முன் வரை, "ஆப்ஜெக்டிவ்" அடிப்படையிலும், பொது அறிவு
மற்றும் விருப்ப பாடத்தின் அடிப்படையிலும் வினாக்கள் கேட்கப்பட்டன.
ஆனால், சமீபத்தில், சிவில் சர்வீஸ் தேர்வில், ஆங்கிலத் திறன் அறியும்
தேர்விற்கு, 22.50 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதை மத்திய பணியாளர்
தேர்வாணையம் கட்டாயமாக்கியுள்ளது. இது, இந்தி மற்றும் மற்ற மாநில மொழி
பேசும், மாணவ மாணவியருக்கு, கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு முன், மத்திய அரசு பல்வேறு துறை
நிபுணர்களுடன் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு
அவர்கள் கூறினர்.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில்,
"ஆங்கில அறிவை பெற்றுள்ள அதிகாரிகளால் தான், உலக அளவிலான பிரச்னை
குறித்தும் விவாதிக்க முடியும்; இதற்கு ஆங்கிலமொழி அவசியம் தேவை" என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட , டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி முருகேசன்
மற்றும் நீதிபதி ராஜிவ் சஹாய் ஆகியோர் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள்
உத்தரவிட்டுள்ளதாவது:
சிவில் சர்வீஸ் தேர்வில், ஆங்கில மொழித்திறன் தேர்வு கட்டாயம் என்ற,
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முடிவை ஆய்வு செய்ய, மத்திய அரசு மூன்று
மாதங்களுக்குள் நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
ஆங்கிலம் கட்டாயமா என்பது தொடர்பான இறுதி முடிவு குறித்து, ஒன்பது
மாதத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள்
உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment