பி.இ., முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களுக்கு, கணிதப் பாடம்
துவங்குவதற்கு முன், 15 மணி நேரம் பயிற்சி அளிக்க, அண்ணா பல்கலை, ஏற்பாடு
செய்துள்ளது. இதற்காக, முதலில், மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி
ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி குறித்து, வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
பிளஸ் 2 தேர்வில், கணிதம்
உள்ளிட்ட முக்கிய பாடங்களில், 200க்கு, 200 மதிப்பெண்களை பெற்று, அண்ணா
பல்கலையின் கிண்டி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட முன்னணி பொறியியல்
கல்லூரிகளில், மாணவர்கள் சேர்ந்து விடுகின்றனர்.
ஆனால், மனப்பாடம் செய்து, 200க்கு, 200 மதிப்பெண் வாங்கிய மாணவர்கள்,
பொறியியல் படிப்பில் சேர்ந்ததும், பாடங்களை புரிந்துகொள்ள முடியாமல்,
திணறும் நிலை இருக்கிறது. இதனால், பல பாடங்களில், "அரியர்ஸ்" வைக்கும்
பரிதாப நிலைக்கும், மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.
குறிப்பாக, கணிதப் பாடத்தில், அதிக மாணவர்கள், தோல்வி அடைகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில், கணிதத்தில், 200க்கு, 200 வாங்கும் மாணவர்களால்,
பொறியியல் கணிதத்தில், தேர்ச்சி பெற முடியவில்லை. எதையுமே, புரிந்துகொண்டு
படிக்காமல், மனப்பாடம் செய்யும் முறையை, மாணவர்கள் கடைபிடிப்பது தான்,
எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என, அண்ணா பல்கலை, கோடிட்டு காட்டுகிறது.
எனினும், மனப்பாடம் செய்யும் கலாசாரம், தமிழக கல்வி முறையில் இருந்து,
இன்னும் விடுபடவில்லை. போட்டி காரணமாக, மதிப்பெண்களை குவிக்க வேண்டும்
என்ற, ஒரே நோக்கத்தில், புத்தகத்தை, அப்படியே, மனப்பாடம் செய்யும் விநோத
போக்கு, மாணவர்களிடையே பரவி வருகிறது.
பொறியியல் கல்லூரிக்கு வரும்போது, மாணவர்கள், பெரும் சிக்கலுக்கு ஆளாகி,
மனதளவில், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதை அறிந்த அண்ணா பல்கலை
துணைவேந்தர் ராஜாராம், கணித பாடத்தில், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
அளிக்க, ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி, பி.இ., முதலாம் ஆண்டில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும், முதல்
செமஸ்டரில், பொறியியல் கணிதப் பாடம் துவங்குவதற்கு முன், 15 மணி நேரம்,
பிளஸ் 2 கணித பாடத்திட்ட அளவில், 15 மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்காக, முதலில், மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி
ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி குறித்து, வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
இந்த பயிற்சி, மாநிலம் முழுவதும், 13 மையங்களில் நடக்கும் என்றும், இதில்,
ஒவ்வொரு பொறியியல் கல்லூரிகளில் இருந்தும், குறைந்தபட்சம், இரு கணித
ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்றும், துணைவேந்தர் ராஜாராம்
உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர்களுக்கான இந்த பயிற்சி, நாளை, 3ம் தேதி துவங்கி, 6ம் தேதி வரை
நடக்கிறது. இந்த பயிற்சி துவக்க விழா, கடந்த, 29ம் தேதி, அண்ணா பல்கலையில்
நடந்தது. இதை, துணைவேந்தர் ராஜாராம் துவக்கி வைத்தார்.
No comments:
Post a Comment