குடியாத்தம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பதவிக்கு 2 பேர்
உரிமை கொண்டாடியதால் பரபரப்பு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த முதல்
நாளே பெற்றோர் அதிர்ச்சி.
குடியாத்தம்
குடியாத்தத்தில் உள்ள நகராட்சி தொடக்க பள்ளிக்கூடத்துக்கு 2 ஆசிரியைகள்
தலைமை ஆசிரியர் பதவிக்கு உரிமை கொண்டாடியதால் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து
வந்த முதல் நாளே பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
தலைமை ஆசிரியர் பதவி
வேலூர் மாவட்டம் குடியாத்தம், சுண்ணாம்புபேட்டை ராஜகணபதிநகரில் நகராட்சி
தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை 32
மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒரு தலைமைஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர்
பணியாற்றி வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிச்சனூர், கங்காதரசாமி
நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த கே.வைரம் என்பவர்
பதவி உயர்வு பெற்று ராஜகணபதிநகரில் உள்ள நகராட்சிக்கு பள்ளி தலைமைஆசிரியராக
நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் குடியாத்தம், பிச்சனூர் காளியம்மன்பட்டியில் உள்ள ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த கே.ஈஸ்வரி என்பவர்
தலைமைஆசிரியர் பதவி உயர்வு வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்திருந்தார்.
பதவி இறக்கத்திற்கு தடையாணை
வழக்கின்படி கல்வித்துறை அதிகாரிகள் ஈஸ்வரிக்கு பதவி உயர்வு வழங்கி
ராஜகணபதி நகரில் உள்ள நகராட்சி பள்ளிக்கு தலைமைஆசிரியராக நியமித்து
உத்தரவிட்டனர். அங்கு தலைமைஆசிரியராக பணியாற்றி வந்த கே.வைரத்தை பதவி
இறக்கம் செய்து கங்காதரசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு ஆசியராக மாற்றம்
செய்தனர்.
இதனையடுத்து கடந்த மாதம் 31–ந் தேதி ஈஸ்வரி ராஜகணபதி நகரில் உள்ள
நகராட்சி பள்ளி தலைமைஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில்
கடந்த 3–ந் தேதி வரை அங்கு தலைமைஆசிரியராக பணியாற்றிய வைரம்
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பதவிஇறக்கத்திற்கு தடைஆணை பெற்றார்.
பெற்றோர்கள் அதிர்ச்சி
இன்று தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள்
தொடங்கப்பட்டது. இந்நிலையில் குடியாத்தம், ராஜகணபதிநகரில் உள்ள நகராட்சி
பள்ளியில் தலைமைஆசிரியர் அறையில் ஈஸ்வரியும், வைரமும் தாங்கள்தான்
தலைமைஆசிரியர் என 2 பேரும் மாறிமாறி கூறிக்கொண்டனர். இதனால் பள்ளிக்கு
பிள்ளைகளை அழைத்து வந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் வசந்தா, சமூக சேவகர் விஜயலட்சுமி
உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் வைரத்திற்கு ஆதரவாக பேசி போராட்டத்தில்
ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட தொடக்கல்வி
அலுவலர் எஸ்.அருள்மொழி, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் சுரேஷ்பாபு, மைக்கேல்
உள்ளிட்ட அதிகாரிகள் 2 தலைமைஆசிரியர்களிடமும் பேச்சுவார்தை நடத்தினர்.
பணியாற்ற முடியாது
அப்போது வைரம் அதிகாரிகளிடம் நீதிமன்ற தடை ஆணையை காண்பித்து நான்
இங்கேயே தலைமைஆசிரியராக பணிபுரிவதாக தெரிவித்தார். அதற்கு அதிகாரிகள்
நீதிமன்ற உத்தரவின்படி பதவிஉயர்வு பெற்ற ஈஸ்வரிக்கு இங்கு பணியிடம்
ஒதுக்கப்பட்டு தலைமைஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அதனால் இங்கு
வைரம் தலைமைஆசிரியராக பணியாற்ற முடியாது என தெரிவித்தனர். மேலும்
வைரத்திற்கு கங்காதரசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசியராக
மாற்றப்பட்டதற்கான உத்தரவை வழங்கினர்.
இதுகுறித்து மாவட்ட தொடக்கல்வி அலுவலர் அருள்மொழி கூறியதாவது:–
சீனியாரிட்டிபடி முன்னுரிமை வழங்கப்படும்
கல்வித்துறையில் பதவிஇறக்கம் என்பது வழக்கமாக நடைபெறும் சம்பவம். ஈஸ்வரி
99–ம் ஆண்டு நகராட்சி பள்ளியில் இருந்து ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு
மாற்றலாகி விட்டார். அதன்பின்னர் பதவிஉயர்வு கேட்டு நீதிமன்றம் சென்றார்.
நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு பதவிஉயர்வு வழங்கி இந்த பள்ளியில்
தலைமைஆசிரியராக நியமிக்கப்பட்டார். இங்கு தலைமைஆசிரியராக பணியாற்றி வந்த
வைரம் பதவிஇறக்கம் செய்யப்பட்டு மீண்டும் கங்காதரசாமி நகராட்சி பள்ளிக்கு
மாற்றப்பட்டார். வருங்காலங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் வைரத்திற்கு
முன்னுரிமை அளித்து பதவிஉயர்வு வழங்கப்படும் என தெரிவித்தார்.
கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறக்கப்பட்ட முதல்நாளில் ஒரே
பள்ளியில் 2 பேர் தலைமைஆசிரியர் பதவிக்கு போட்டியிட்ட சம்பவம் மாணவர்கள்,
ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment