"பேருந்தில் தவறவிட்ட, ஐந்து லட்சம் ரூபாயை எடுத்தவர்கள், அப்பணத்தைத்
திருப்பிக் கொடுத்து, என் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்" என ஓய்வுபெற்ற
ஆசிரியர், உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை, திருவான்மியூர்,
திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர், சூரிய நாராயணன், 62. கோபாலபுரத்தில் உள்ள,
தனியார் பள்ளியில், ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், நிலம்
வாங்குவதற்காக, வங்கியில், 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.
இதில், ஒரு பகுதி தொகையை, நிலம் வாங்க கொடுத்துவிட்டு, மீதமுள்ள, ஐந்து
லட்சம் ரூபாயை கொடுப்பதற்காக, மே, 8ம் தேதி இரவு, அடையாறிலிருந்து
தாம்பரத்துக்கு, "சி 51" பேருந்தில், இரவு, 9:00 மணியளவில் சென்றுள்ளார்.
தாம்பரம், எம்.சி.சி., கல்லூரி அருகே சென்றபோது, பேருந்திலிருந்து
இறங்க, படிக்கட்டில் நின்றுள்ளார். அப்போது, கையில் வைத்திருந்த பணப் பை,
தவறி, சாலையில் விழுந்து விட்டது. "பணத்துடன் பை விழுந்து விட்டது" என
கத்தியுள்ளார். இவரது, அலறலைக் கேட்டு, பேருந்து சிறிது தூரம் சென்று
நின்றது.
பேருந்திலிருந்த இறங்கி, பணப்பை விழுந்த இடத்தில் தேடியபோது, காணவில்லை.
அப்பகுதியில் இரவு முழுவதும் தேடியும், பணப்பை கிடைக்கவில்லை.
இதுகுறித்து, சேலையூர் போலீசில், சூரிய நாராயணன் புகார் செய்துள்ளார்.
ஆனால், இதுவரை பணம் கிடைக்கவில்லை.தன் வாழ்நாள் உழைப்பையும், எதிர்கால
வாழ்க்கையையும் அடகு வைத்து, வங்கியில் பெற்ற கடன் தொகையே, சூரிய நாராயணன்
வாழ்வில் ஒளியேற்றும்.
இந்நிலையில், பணம் தொலைந்து விட்டதால், பெரும் நெருக்கடிக்கு அவர்
தள்ளப்பட்டுள்ளார். எனவே, பணத்தை எடுத்தவர்கள், கருணை உள்ளத்தோடு
திருப்பித் தந்து, சரிந்துவிட்ட தன் வாழ்வை நேராக்க வேண்டும் என,
சூரியநாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment