தூத்துக்குடி கடலில் மூழ்கி, பலியான நான்கு மாணவர்களின் பெற்றோர்,
பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக,
பள்ளி முதல்வர் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.
மதுரை, திருநகர்,
சி.எஸ்.ராமாச்சாரி நினைவு மெட்ரிக் பள்ளியில், 10ம் வகுப்பு, பிளஸ் 2
மாணவர்கள், 113 பேர், ஜூலை 12ல், தூத்துக்குடிக்கு சுற்றுலா சென்றனர்.
தெர்மல் நகர் கடற்கரையில் குளித்த போது, அலையில் சிக்கி, நான்கு மாணவர்கள்
பலியாயினர். இதனால், பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு, நேற்று திறக்கப்படும்
என அறிவிக்கப்பட்டது.
பலியான மாணவர்களின் பெற்றோர், உறவினர் உட்பட அப்பகுதியினர், பள்ளி முன்,
காலை, 8.30 மணிக்கு, மறியலில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகிகள், அதிகாரிகள்
வராததால், ரோட்டில் மறியல் செய்தனர்.
இறந்த மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: தடை செய்யப்பட்ட கடற்கரைக்கு,
மாணவர்களை அழைத்துச் சென்றது தவறு. அலையில் சிக்கி பரிதவித்த போது, உயரமான
மாணவர்களை கடலில் குதிக்கச் செய்து, காப்பாற்ற கூறியுள்ளனர்.
பிள்ளைகள் சிகிச்சையில் இருப்பதாக அழைத்து சென்றனர். நாங்கள் சென்றதும்,
நிர்வாகிகள் தலைமறைவாகினர். பிரேத பரிசோதனை முடிந்து, குழந்தைகளை
வீட்டிற்கு கொண்டு வரும் வரை, பள்ளி நிர்வாகம் எந்த உதவியும் செய்யவில்லை.
பிரேத பரிசோதனைக்கு, தேவையான துணியை கூட, நாங்கள் வாங்கிக் கொடுத்தோம்.
இறுதி சடங்கிற்கு, நிர்வாகத்தினர் வரவில்லை. இவ்வாறு, அவர்கள் கதறினர்.
போலீசார் சமாதானம் செய்ததையடுத்து, மறியலை கைவிட்டனர். ஆர்.டி.ஒ.,
முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம், "பள்ளியை மூட
வேண்டும்; அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்; நிர்வாகிகளை கைது செய்ய
வேண்டும்" என, பெற்றோர் கூறினர். பள்ளி நிர்வாகிகளுடன், அதிகாரிகள் பேச்சு
நடத்தினர்.
முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவின் படி, பள்ளிக்கு விடுமுறை
விடப்பட்டது. அவர் புகாரின்படி, பள்ளி மூத்த முதல்வர் மாறன், சுற்றுலா
சென்ற ஆசிரியர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
"தாளாளர் கமலம் ராஜேந்திரன், நிர்வாகி வசந்தி மற்றும் சுற்றுலா சென்ற
மேலும் இரு ஆசிரியர்களை, கைது செய்ய வேண்டும்" என, பெற்றோர் கூறினர்.
நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து, பெற்றோர் கலைந்து
சென்றனர்.
முதன்மைக் கல்வி அலுவலர் கூறுகையில், "சுற்றுலா செல்ல பள்ளி நிர்வாகம்
அனுமதி பெறவில்லை. மாணவர்கள் இறப்பு, பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்டு,
ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. முறையான விளக்கம்
அளிக்காவிடில், அங்கீகாரத்தை ரத்து செய்ய, மெட்ரிக் பள்ளிகள்
இயக்குனரகத்திற்கு பரிந்துரைக்கப்படும்" என்றார்.
No comments:
Post a Comment