சீனாவின் ஹனான் மாநிலத்தில் உள்ள சுங்ஷான் ஊரில், ஷாவோஷீ
மலையடிவாரத்தில் உள்ளது "ஷாவோலின்" ஆலயம். கி.பி., 467ம் ஆண்டு, "பாத்வோ"
அல்லது "புத்தபத்ரா" என்பவர் அந்த ஆலயத்தைஉருவாக்கினார் என, வரலாறு
கூறுகிறது.
அவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். இந்த ஆலயத்து பவுத்த
துறவிகளால் உருவாக்கப்பட்டது தான், "குங் பூ" என்ற தற்காப்பு கலை. அதை
சீனர்கள், நோயாளிகளின் மனதை படித்து அதற்கேற்ற வகையில் அளிக்கப்படும்
மருத்துவம் என்கின்றனர்.
"ஷாவோலின்" ஆலயத்தில் இருந்து, கடந்த, 1500 ஆண்டுகளில்
தமிழகத்திற்கு இதுவரை ஒரு பவுத்த துறவி கூட, வந்ததில்லை என, கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த ஆலயத்தை சேர்ந்த பவுத்த துறவிகள், ஷீயான்லை,
ஷீயான்பேர் இரண்டு பேர் சென்னை வந்துள்ளனர்.
சென்னையில் உள்ள ஆசியவியல் நிறுவனம் நடத்தும் பழங்கால
மருத்துவம் தொடர்பாக ஒலைச்சுவடிகள் குறித்த பயிலரங்கத்தில் கலந்து கொள்வது,
காஞ்சிபுரத்தில் பிரமாண்டமாக கட்டப்படவுள்ள போதிதர்மர் நினைவகத்தை
பார்வையிடுவது தான் அவர்கள் வருகையின் நோக்கம்.
"ஷாவோலின்" ஆலயம் குறித்து அவர்கள் கூறியதாவது: "நாங்கள்,
சீனாவின் மரபு வழி மருத்துவமான டி.சி.எம்., படித்துள்ளோம். போயை எனப்படும்
அந்த புத்த மருத்துவ படிப்பை நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டும். அது முடித்த
பிறகு "ஷாவோலின்" ஆலயத்தில் பயற்சி பெற விரும்பினோம். அங்கு சேர
விரும்புவோர் 19 முதல் 60 வயதுக்குள் இருக்கலாம். அந்த ஆலயத்தில் சேர,
அங்கு மனக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்படும். அதில்,
வெற்றி பெறுவோர் மட்டுமே பயிற்சி பெற அனுமதிப்பர்.
"ஷாவோலின்" ஆலயத்தில் மருத்துவம், தற்காப்பு, தியானம்
ஆகியவையே பிரதானமாக பவுத்த துறவிகளுக்கு கற்று கொடுக்கப்படுகிறது. ஜென்
புத்த மத போதனைகளும் உபதேசிக்கப்படுகிறது. அங்கு 300க்கும் மேற்பட்ட
துறவிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பெண் துறவிகளும் உள்ளனர்.
ஆலயத்தின் உள்ளேயே பிரமாண்ட பொது மருத்துவமனை செயல்பட்டு
வருகிறது. புறநோயாளிகளுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்பட்டு, மருந்து,
மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அதற்கேற்ற வகையில் மருத்துவத்துடன்
மருந்துகள் தயாரிப்பதும் கற்று தரப்படுகிறது. "குங் பூ" தற்காப்பு கலை,
மூன்று வயது முதல் கற்று தரப்படுகிறது.
அந்த கலையின் அடிப்படையை கற்று கொள்ள ஆறு ஆண்டுகள் ஆகும். முழுமையாக கற்று கொள்ள 10 ஆண்டுகள் ஆகும்.
பயிற்சி முடித்தோர் விருப்பப்பட்டால், அங்கேயே இருந்து
பணிவிடைகள் செய்யலாம். இல்லாவிட்டால் வெளியேறி குடும்பத்துடன் இணையவும்
அனுமதி உண்டு. ஆனால், பயிற்சிக்காகவோ, துறவியாவதற்காகவோ உள்ளே நுழைந்து
விட்டால், குடும்பத்தை துறக்க வேண்டும்.
"ஷாவோலின்" ஆலயத்தை உருவாக்கியதே ஒரு இந்தியர் தான். 76
நாடுகளில், ஆலயத்தின் கிளைகள் செயல்படுகின்றன.ஆலயத்தின் மருத்துவமே, சீன
மற்றும் தமிழகத்தினை அடிப்படையாககொண்டது என்பதால், இங்கு நடக்கும்
பழங்காலத்து ஓலைச்சுவடி மருத்துவம் மூலம் மேலும் பல்வேறு விஷயங்களை கற்று
கொள்ளவும், "பாத்வோ"வின் சொந்த ஊரான காஞ்சிபுரத்தையும், அவருக்கு நினைவகம்
கட்டும் இடத்தையும் பார்வையிடும் ஆவலில் வந்துள்ளோம்." இவ்வாறு அவர்கள்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment