மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் நேற்று
முன்தினம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய, மத்திய அரசு
முடிவு செய்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,
மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, மருத்துவ பொது
நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என, நேற்று முன்தினம், சுப்ரீம் கோர்ட்
உத்தரவிட்டது. மேலும், அத்தகைய தேர்வை நடத்த, இந்திய மருத்துவ
கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை; அவ்வாறு நடத்துவது, அரசியல் அமைப்புச்
சட்டத்திற்கு முரணானது எனவும், இடைக்கால தீர்ப்பு வழங்கியது.
முதற்கட்ட மருத்துவ நுழைவு கவுன்சிலிங் நடைபெற்று கொண்டிருக்கும்
நிலையில், மருத்துவ படிப்பில் சேர ஆர்வமாக உள்ள மாணவர்கள், சுப்ரீம் கோர்ட்
தீர்ப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர வேண்டிய நிலை அவர்களுக்கு
ஏற்பட்டுள்ளது; இதற்காக அவர்கள், லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்க வேண்டிய
தேவை ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின் பெற்றோர், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசு, அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற
எதிர்பார்ப்பு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
டில்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த,
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட்டில், நல்ல தீர்ப்பு வரும் என காத்திருந்தோம்;
துரதிருஷ்டவசமாக, அத்தகைய தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனால், எங்களுக்கு
சிறிது மன வருத்தம் தான்; ஏனெனில், பலவற்றை சீர்படுத்த நாங்கள்
திட்டமிட்டிருந்தோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, எங்களுக்கு வருத்தத்தை
அளிக்கிறது.
ஏனெனில், மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, அங்கும், இங்கும் ஓடியாட
வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. மருத்துவம் படிக்க, பல தேர்வுகளை எழுத
வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பல தனியார் மருத்துவ கல்லூரிகளில்,
நுழைவுத் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன; இதனால், மாணவர்களுக்கு சிரமங்கள்
அதிகரித்து விட்டன.
நிறைய நேரம் வீணாகி விட்டது; பணம் விரயமாகி விட்டது. ஒரு நுழைவுத்
தேர்வு எழுதினால் போதும் என்ற நிலை இல்லாததால், மாணவர்கள் மிகுந்த கவலை
அடைந்துள்ளனர்.
எனவே, இப்போது இருக்கும் நிலையில், தீர்ப்பை எதிர்த்து சீராய்வு அல்லது
வேறு எந்த முறையீடாவது செய்வது தான், சரியாக இருக்கும். எனவே, சுப்ரீம்
கோர்ட் தீர்ப்பை, முழுமையாக படித்து, ஆராயுமாறு அதிகாரிகளுக்கு
உத்தரவிட்டுள்ளேன். சட்ட நிபுணர்களின் ஆலோசனையும் கோரப்பட்டுள்ளது.
சட்டப்படியான நடவடிக்கையை தவிர்த்து, வேறு ஒன்றும் இப்போதைக்கு இல்லை. இவ்வாறு, அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.
No comments:
Post a Comment