தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களில், இரண்டாம் கட்ட
கலந்தாய்வில், மருத்துவம் பயில இடம் கிடைப்போருக்கு, அவர்கள், பி.இ.,
மாணவர் சேர்க்கையின் போது செலுத்திய கட்டணம் திரும்பக் கிடைக்க, அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,
படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்து, அதிகபட்சம், மூன்று வார
இடைவெளியில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு, சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
ஆகியவற்றில் அதிகரிக்கப்பட்ட, 185 எம்.பி. பி.எஸ்., இடங்கள் மற்றும்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள்
ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவக் கவுன்சில்
(எம்.சி.ஐ.,) இன்னும் இறுதி ஒப்புதல் வழங்கவில்லை.
இதனால், ஜூலை இரண்டாம் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்ட, இரண்டாம் கட்ட
கலந் தாய்வு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதில், எம்.பி.பி.எஸ்., அல்லது பி.டி.எஸ்., படிக்க இடம் கிடைக்க
வாய்ப்புள்ளோர், பி.இ., படிப்பிற்கும் விண்ணப்பித்திருந்தால், அவர்களுக்கு
கலந்தாய்வில், ஏதாவதொரு தனியார் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து
விடுகிறது.
அவர்கள் தேர்வு செய்த கல்லூரியில், ஜூலை மூன்றாம் வாரத்திற்குள் சேர
வேண்டும் என்பதால், மருத்துவப் படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு
முடிவை அறியும் முன், அவர்கள் பி.இ., சேர வேண்டிய நிர்பந்தம்
ஏற்பட்டுள்ளது.
இவர்களில், இரண்டாம் கட்ட கலந்தாய்வில், எம்.பி. பி.எஸ்., அல்லது
பி.டி.எஸ்., படிக்க இடம் கிடைப்போருக்கு, அவர்கள், பி.இ., மாணவர்
சேர்க்கையின் போது செலுத்திய கட்டணம் திரும்பக் கிடைக்க, அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:
பி.சி., பிரிவைச் சேர்ந்த என்மகள், மருத்துவப் பிரிவில், 195.25 "கட்-ஆப்"
மதிப்பெண் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு, "கட்- ஆப்" மதிப்பெண்களை
ஒப்பிடும்போது, ஏதாவதொரு, தனியார் மருத்துவக் கல்லூரி அல்லது தனியார் பல்
மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் பயில அவருக்கு இடம் கிடைக்க
வாய்ப்புள்ளது.
ஆனால், இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்னும் நடக்காததால், என் மகளை,
இம்மாதம், 23ம் தேதிக்குள், சென்னை, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள, ஒரு
தனியார் பொறியியல் கல்லூரியில், பி.இ., சேர்க்க வேண்டிய நிர்பந்தம்
ஏற்பட்டுள்ளது.
அங்கு, மாணவர் சேர்க்கையின் போது, அரசு நிர்ணயித்துள்ள கல்விக்
கட்டணத்துடன், பஸ் கட்டணம், உணவுக் கட்டணம் என, மொத்தம், 1.25 லட்சம்
ரூபாய், கட்ட வேண்டும் எனவும், இத்தொகை எக்காரணம் கொண்டும் திரும்ப
தரப்படாது எனவும் தெரிவித்து உள்ளனர்.
இதனால், என் மகளுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வில், மருத்துவம் பயில
இடம் கிடைக்கும்பட்சத்தில், நாங்கள், 1.25 லட்சம் ரூபாயை இழக்க வேண்டி
வரும். மருத்துவப் படிப்பை எதிர்நோக்கி உள்ள பலரும் இந்த இழப்பை
சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு தாமதத்திற்கு, விண்ணப்பதாரர்கள்
எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டார்கள் என்பதால், வேறு படிப்புகளில் சேர்ந்த
பின், மருத்துவம் பயில இடம் கிடைப்போருக்கு, அவர்கள், முந்தைய
படிப்பிற்கான, மாணவர் சேர்க்கையின் போது செலுத்திய, கட்டணம் திரும்பக்
கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா கூறியதாவது: அரசு மற்றும் தனியார்
மருத்துவக் கல்லூரிகளுக்கு, எம்.சி.ஐ.,யின் இறுதி ஒப்புதல் வந்த பின் தான்
நாங்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த முடியும்.
அதற்கு முன், பி.இ., போன்ற படிப்புகளில் சேர்வோருக்கு, மருத்துவம் பயில
இடம் கிடைத்தால், முந்தைய படிப்பிற்கு, அவர்கள் செலுத்திய கட்டணம்
திரும்பக் கிடைக்க, நாங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது.
இவ்வாறு, வம்சதாரா கூறினார்.
No comments:
Post a Comment