பீகாரில், மதிய உணவு சாப்பிட்ட, 23 குழந்தைகள் இறந்த சம்பவத்தை
தொடர்ந்து, "மதிய உணவு வழங்கும் பணியில், இனி, ஈடுபட மாட்டோம்" என
அம்மாநிலத்தைச் சேர்ந்த, மூன்று லட்சம் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
பீகாரில், சரண் மாவட்டத்தில்,
ஆரம்பப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள், 23 பேர், சமீபத்தில்
இறந்தனர். நாடு முழுவதும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய, இந்த சம்பவத்தை
தொடர்ந்து, பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை, தீவிரமாகக்
கண்காணிக்க, மத்திய, மாநில அரசுகள், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து
வருகின்றன.
இந்நிலையில், பீகார் மாநில ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகளின்
ஆலோசனைக் கூட்டம், நேற்று பாட்னாவில் நடந்தது. இதில், எடுக்கப்பட்ட முடிவு
குறித்து, ஆசிரியர் சங்கத் தலைவர், பிரஜானந்தன் சர்மா கூறியதாவது:
மதிய உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த, தனியாக ஆட்களை நியமிக்க
வேண்டும். ஆசிரியர்களை இந்த பணியில் ஈடுபடுத்துவது தவறு. இது,
ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச் சுமையையும், தேவையற்ற மன உளைச்சலையும்
ஏற்படுத்துகிறது.
இதுதொடர்பாக, மாநில அரசிடம் ஏற்கனவே வலியுறுத்தியும், எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, சரண் மாவட்டத்தில், பள்ளி
குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து, பள்ளியின் ஆசிரியர்கள் மீது, புகார்
கூறப்படுகிறது. எனவே, இனிமேல், மதிய உணவு வழங்கும் திட்டத்தில் ஈடுபடப்
போவதில்லை என, எங்கள் சங்கத்தில் ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளோம்.
எங்கள் சங்கத்தில், மூன்று லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கும்,
மதிய உணவு வழங்கும் திட்டத்துக்கும், இனி எந்த தொடர்பும் இல்லை. இந்த பணியை
செயல்படுத்துவதற்காக, தனியாக ஏஜன்சிகளை பணி அமர்த்தலாம். இவ்வாறு,
பிரஜானந்தன் சர்மா கூறினார்.
No comments:
Post a Comment