திட்டக்குடியில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வந்த பள்ளியை கல்வித்துறை அதிகாரிகள் மூடினர்.
கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வந்த 44
பள்ளிகளை மூட கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டார். இதில் திட்டக்குடி
பகுதியை சேர்ந்த இந்தியன் பள்ளியும் அடங்கும். ஆனால் கடந்த ஒரு மாதமாகவே
இந்த பள்ளியில் தொடர்ந்து மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் நடந்து
வந்தது.
பெற்றோர்கள் பலர் கேட்டதற்கு பல காரணங்களை கூறி பள்ளியில்
தொடர்ந்து சேர்க்கையை நடத்தி பெற்றோர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு
வந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் 15ம் தேதி பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட
மங்களூர் வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பள்ளி அங்கீகாரம் இல்லாமல்
இயங்கி வந்ததை கண்டறிந்து மூட உத்தரவிட்டார்.
பள்ளி நிர்வாகி ராமசாமி அளித்த உத்தரவாதத்தின் பேரில்
அதிகாரிகள் எச்சரித்து, வகுப்புகள் நடக்க தடை விதித்தனர். தொடர்ந்து சில
நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு மீண்டும் பள்ளி இயங்க தொடங்கியது.
இது குறித்து தகவலறிந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்
குணசேகரன் தலைமையில் மாவட்ட நர்சரி பள்ளிகள் அலுவலர் ராஜசேகர், மெட்ரிக்
பள்ளி ஆய்வாளர் பிச்சையப்பன், மங்களூர் வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
கலைச்செல்வி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போதும், அங்கீகாரமின்றி பள்ளி இயங்கி வருவதை கண்டறிந்த
அதிகாரிகள் பள்ளியை மூட உத்தரவிட்டனர். பள்ளி மாணவ, மாணவிகளை அங்கீகாரமுள்ள
பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்களை அறிவுறுத்தினர்.
பள்ளி அங்கீகாரமில்லாமல் இயங்கி வருவது குறித்து அறிவிப்பை
பள்ளியின் வாயிலில் பெற்றோர்களின் பார்வையில் படும்படி வைக்க
உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment