பி.இ., படிப்பில், நகர்ப்புற மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை.
நடப்பாண்டில், நகர்ப்புறங்களில் இருந்து, 47,155 பேர் மட்டுமே, பி.இ.,
படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால், கிராமப்புறங்களில் இருந்து, 77,619 பேர்
சேர்ந்து, அசத்தியுள்ளனர்.
பி.இ., சேர்க்கை கலந்தாய்வு,
கடந்த மாதம், 21ம் தேதி துவங்கி, நேற்று முன்தினத்துடன் முடிந்தது. அரசு
ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சத்திற்கும் அதிகமாக இடங்கள் இருந்தபோதும்,
1,24,774 மாணவர் மட்டுமே சேர்ந்தனர்.
இந்நிலையில், பி.இ., சேர்க்கை குறித்த புள்ளிவிவரங்களை, அண்ணா பல்கலை
வெளியிட்டு உள்ளது. வழக்கமாக, பி.இ., சேர்க்கையில், நகர்ப்புற மாணவர்களின்
பங்கு, பிரதானமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு, நகர்ப்புற மாணவர்கள் ஆர்வம்
காட்டாதது தெரியவந்து உள்ளது.
நகர்ப்புறங்களில் இருந்து, 47,155 பேர் பி.இ., படிப்பில்
சேர்ந்துள்ளனர். ஆனால், மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் இருந்து,
77,619 பேர் பி.இ., படிப்பில் சேர்ந்து, சாதனை படைத்துள்ளனர்.
ஆங்கில வழியில் படித்த மாணவர்கள், அதிகளவில், பி.இ., படிப்பில்
சேர்ந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை, 68,641 ஆக உள்ளது. தமிழ் வழியில்
படித்து, பி.இ.,யில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை, 56,133 ஆக உள்ளது.
நகர்ப்புற மாணவர்களிடையே, விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. இதனால், பி.இ.,
அல்லாத வேறு உயர் படிப்புகளில் சேர்ந்து விடுகின்றனர். இதற்கு நேர்மாறான
நிலைமை, கிராமப்புற மாணவர்களிடையே காணப்படுவதாக கூறப்படுகிறது. இதன்
காரணமாகவே, கிராமப்புற மாணவர்கள், அதிகளவில் பி.இ., படிப்பில்
சேர்ந்துள்ளனர் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
* நிரம்பிய மொத்த இடங்களில், மாணவர் எண்ணிக்கை, 76,743 ஆகவும், மாணவியர்
எண்ணிக்கை, 48,031 ஆகவும் உள்ளது. மாணவியரை விட, 28,712 மாணவர் கூடுதலாக
சேர்ந்துள்ளனர்.
* 32 மாவட்டங்களில், அதிகபட்சமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 21,012
இடங்கள் நிரம்பியுள்ளன. இரண்டாம் இடத்தை பிடித்துள்ள கோவை மாவட்டத்தில்,
19,935 இடங்களும், மூன்றாம் இடம் பிடித்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில்,
11,604 இடங்களும் நிரம்பியுள்ளன.
* நான்காம் இடத்தை, நாமக்கல் மாவட்டம் பிடித்துள்ளது. இங்கு, 7,623 பேர்
சேர்ந்துள்ளனர். ஐந்தாம் இடத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில், 4,615
மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
No comments:
Post a Comment