அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச
லேப்- டாப் தரப்படுகிறது. சுயநிதி பிரிவில் படிக்கும், மாணவர்களுக்கு இலவச
லேப்- டாப் கிடையாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், திண்டுக்கல்
மாவட்டத்தில், சுயநிதிபிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும் லேப்- டாப்
தரப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் எம்.எஸ்.பி., மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்-
டாப் வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற மின் துறை அமைச்சர்
விஸ்வநாதன் காரை, சுயநிதி பள்ளி மாணவர்கள் முற்றுகையிட்டனர். பிற
பள்ளிகளில் வழங்கியதை போல் தங்களுக்கும் இலவச லேப்-டாப் தர வேண்டும்
என்றனர்.
இதையடுத்து, மாவட்டத்தில் எந்தந்த பள்ளிகளில், சுயநிதி பிரிவு
மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்பட்டது என கல்வித்துறையினர் பட்டியல்
தயாரிக்கின்றனர்.
சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்-டாப்களை
மீண்டும் பெற்று, முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு
வழங்காத தலைமை ஆசிரியர்கள், லேப்-டாப்பிற்குரிய பணத்தை அரசுக்கு செலுத்த
வேண்டும் என கல்வி அதிகாரிகளால் வாய்மொழி உத்தரவு தரப்பட்டுள்ளது.
இதையடுத்து, சுயநிதிபிரிவு மாணவர்களிடம் லேப்-டாப்பை மீண்டும் பெறும்
முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,
"ஒவ்வொரு ஆண்டும் அரசு உதவி பெறும் பிரிவில் படிக்கும் மாணவர் எண்ணிக்கை,
சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை விபரத்தை தலைமை ஆசிரியர்,
மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கிறார்.
ஒவ்வொரு பள்ளிக்கும் எத்தனை லேப்-டாப் தேவை என்ற பட்டியல், அவர்களால்
அரசிற்கு தரப்படுகிறது. அவர்கள் தரும் லேப்-டாப்களை தான் நாங்கள்
மாணவர்களுக்கு தந்தோம். மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடந்த தவறால், எங்களை
பணம் கட்ட கூறுவது எப்படி நியாயம்" என்றார்.
லேப்-டாப் வழங்கி பல நாட்கள் கழித்து தற்போது மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என கூறுவதால், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுகுமார் தேவதாஸ் கூறுகையில்,
"சுயநிதி பிரிவு மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் கிடையாது. காந்திகிராமம்
தம்பித்தோட்டம் மேல்நிலை பள்ளி, சுயநிதி மாணவர்களுக்கு தவறுதலாக இலவச லேப்
டாப்கள் வழங்கப்பட்டிருந்தன. இவை திரும்ப பெறப்பட்டுள்ளது" என்றார்.
No comments:
Post a Comment